ஒருமுறை மட்டுமே இடம்பெற்ற நடவடிக்கையாக சிறிய, பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு பிரிவுகளிலும் நேற்று சிஓஇ கட்டணம் குறைந்தது. இருப்பினும், பொதுப்பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் புதிய உச்சமாக $125,000ஐ தொட்டது.
மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் கடந்த ஏலக்குத்தகையில் சரிவைச் சந்தித்தபோதும் ஆக அண்மைய ஏலக்குத்தகையில் மீண்டும் உயர்ந்தது. இதன்படி இம்மாதம் 4ஆம் தேதியன்று $5,002 ஆக இருந்த இப்பிரிவின் சிஓஇ கட்டணம், நேற்று $10,602 என இருமடங்காகப் பதிவானது.
1,600 சிசிக்கு உட்பட்ட சிறிய கார்கள், 110 கிலோவாட் சக்தி வாய்ந்த மின்சார வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் முந்தைய ஏலக்குத்தகையில் இருந்த $101,001இலிருந்து 8.91% குறைந்து $92,000 ஆனது.பெரிய கார்கள், மேலும் அதிக சக்தி கொண்ட மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கான சிஓஇ கட்டணம் முந்தைய ஏலக்குத்தகையின் $119,399இலிருந்து 5.33% சரிந்து $113,034 ஆனது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $124,002இலிருந்து 0.8% அதிகரித்து $125,000 ஆனது. கடந்த மாதம் இரண்டாவது ஏலக்குத்தகையில் இப்பிரிவின் சிஓஇ புதிய உச்சத்தை எட்டியதை அடுத்து நேற்று பதிவான சிஓஇ கட்டணம் அதை முறியடித்துவிட்டது. வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 2.53% அதிகரித்து $77,501 ஆனது.