அனுமதியின்றி தன் அறைக்குள் சென்ற மகனைக் கோபத்தில் கத்தியால் குத்திய 41 வயது மாதுக்கு நேற்று இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மாது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறுவனுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. 20 நாள்கள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தாயாரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அம்மாது 1999ல் மற்றொரு வரை ஆயுதத்தால் தாக்கியதாக துணை அரசு வழக்கறிஞர் எமிலி கோ கூறினார். ஆனால், அந்த வழக்கு பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அம்மாது மிதமான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்தப் பாதிப்பு தாம் செய்வது தவறு என்ற எண்ணத்தை அவருக்கு உணர்த்தாமல் இல்லை என்றார் அவர்.
"குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செயல்கள், குறிப்பாக குடும்ப உறவின் அமைப்பிற்குள் இடம்பெறும்போது மிகவும் மோசமானதாக உள்ளது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான நம்பிக்கையையும் பிணைப்பையும் அது சிதைக்கிறது," என்றார் அவர்.
சம்பவம் 2021ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, பொங்கோலில் உள்ள அடுக்குமாடி வீட்டில் காலை 10 மணி அளவில் நடந்தது.
சிறுவன் அவனது அம்மாவின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அவர் பயன்படுத்தாத கைப்பேசியை எடுத்து விளையாடத் தொடங்கினார்.
கோபமடைந்த மாது சமைய லறையிலிருந்து பழம் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு, அறைக்குள் சென்றார். மகன் தன் அறையில் மெத்தையில் போர்த்திப் படுத்திருந்ததைப் பார்த்தார். வலது கையால் மகனின் போர்வையை இழுத்தவாறே, காயப்படுத்தும் என்று தெரிந்தே கத்தியை குத்துவதுபோல் கீழே இறக்கியுள்ளார். போர்வையைக் கிழித்துக்கொண்டு கத்தி சிறுவனின் வலது தொடையைப் பதம்பார்த்தது.
வலியில் கத்திய சிறுவன் தனது அறைக்கு ஓடி கதவைச் சாத்திவிட்டு, காவல்துறையை அழைத்தான். அவன் கேகே மாதர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். நவம்பர் 25ஆம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்றான்.
சிறுவன் இன்னும் குற்றவாளியின் பராமரிப்பில் இருக்கி றாரா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
மாதுக்கு $15,000 பிணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையைத் தொடங்க ஜூன் 14ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

