சிங்கப்பூருக்கும் கென்யாவுக்கும் இடையே அதிக வணிக, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் வண்ணம், இருதரப்பு முதலீட்டு உடன்பாட்டையும் முன்னர் கையெழுத்திடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாட்டையும் விரைவுபடுத்த இருநாடுகளும் இணங்கியுள்ளன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மின்னிலக்க பொருளியல் ஆகியவற்றில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை நேற்று பிரதமர் லீ சியன் லூங்கும் கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவும் பார்வையிட்டனர்.
நைரோபியில் உள்ள அரசு இல்லத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இருதலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லீ பேசினார். இருதரப்பு உடன்பாடும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாடும் விரைவில் உடன்பாடு காண்பது, வணிகங்களுக்கு வலுவான சமிக்ஞையை அனுப்பும் என்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், முதலீட்டில் தெளிவையும் உத்தரவாதத்தையும் வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
"மின்னிலக்க பொருளியலில் இணைப்புகளை உருவாக்குவது, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மையான வளர்ச்சி ஆகியவற்றில் நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பது முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்," என்று பிரதமர் லீ கூறினார்.
எனவேதான் நிர்வாகம், பொதுச் சேவை நிர்வாகம், நகர்ப்புற திட்டமிடல் போன்ற பல்வேறு துறைகளில் இரு தரப்பும் அணுக்கமாக ஒத்துழைத்து வருகின்றன என்றார் அவர்.
சிங்கப்பூரும் கென்யாவும் 2021ல் 30 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடின.
இருவழி வணிகம் 2017ல் இருந்து 2.5 மடங்கு அதிகரித்து 2022ல் S$212 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது. கென்யாவில் உள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்து, தளவாடங்கள், துறைமுக நிர்வாகம், வேளாண் வணிகம், விருந்தோம்பல், நிதித்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் செயல்படுகின்றன என்று திரு லீ கூறினார்.
உலகிலேயே வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான சிங்கப்பூரின் பொது வீடமைப்பு குறித்து அறிந்துகொள்ளவும் ஆதரவைப் பெறவும் கென்யா விரும்புகிறது என்றார் அதிபர் ரூட்டோ.
கென்யாவின் போக்குவரத்து, தளவாடத் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
"மிகச் சிறிய, இயற்கை வளங்கள் இல்லாத, செல்வச் செழிப்பு இல்லாத, வாரிசுரிமையே இல்லாத ஒரு நாடு எப்படி சரியான முடிவுகளை எடுத்து வெற்றிபெற்றது என்பதை அறிந்துகொள்ள பிரதமர் லீயின் வருகை ஒரு சாட்சியாகும்," என்றார் அவர்.
கென்யாவின் கேந்திர முக்கியத்துவம், சிங்கப்பூர் நிறுவனங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குள் நுழைவதற்கான வாயிலாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை திரு லீ குறிப்பிட்டார். மேலும் தென்கிழக்கு ஆசிய சந்தையில் கால்வைக்க கென்ய நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் தொடக்க தளமாக இருக்கும் என்றார் அவர்.

