செங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ ஏற்பட்ட வீட்டிலிருந்த மூவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். புகையை சுவாசித்ததால் அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கம்பக்க வீடுகளிலிருந்த மேலும் மூன்று பேர் வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) கூறியது.
எஸ்சிடிஎஃப் வருவதற்கு முன்னரே, அந்த புளோக்கில் இருந்து கிட்டத்தட்ட 50 குடியிருப்பாளர்கள் வெளியேறிவிட்டனர்.
நான்காவது மாடியில் உள்ள அந்த வீட்டின் வரவேற்பு அறையில் பரவியிருந்த தீ தண்ணீர் மூலம் அணைக்கப்பட்டது என்று எஸ்சிடிஎஃப் தெரிவித்துள்ளது.
மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்ட சாதனத்தில் (பிஎம்டி) இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்சிடிஎஃப் கூறியது.
மின்னூட்டச் சாதனங்களை நீண்ட நேரம் கவனிக்காமல் இருப்பது அல்லது இரவு முழுவதும் மின்னூட்டம் செய்வது, அசல் அல்லாத பேட்டரிகளை வாங்காமலோ, பயன்படுத்தாமலோ இருப்பது போன்ற பிஎம்டி சாதனங்களால் ஏற்படும் தீயை தவிர்க்கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு எஸ்சிடிஎஃப் அறிவுறுத்தியது.

