சிங்கப்பூரில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு நீடித்த நிலைத்தன்மையான எரிபொருளை பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள், கரிம உமிழ்வு குறைப்பு இலக்குகளை இங்குள்ள விமானப் போக்குவரத்துத் துறைக்கான வரைவுத் திட்டமாக இருக்கும்.
இவ்வாண்டு வெளியிடப்படவுள்ள சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மையான விமான மைய வரைவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தகைய கட்டாய விதிமுறைகள், ஊக்கத்தொகைகள் போன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) ஆய்வு செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கொள்கைகள், நீடித்த நிலைத்தன்மையான விமான எரிபொருளுக்கான நீண்டகாலத் தேவையையும் அதற்கான வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துவதாக அமைச்சர் சொன்னார்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்கு கொழுப்புகள், போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் நீடித்த நிலைத்தன்மையான விமான எரிபொருள், விமானப் போக்குவரத்தினால் ஏற்படும் கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான மிகவும் நம்பிக்கையான தீர்வாகக் கூறப்படுகிறது. ஆனால், வழக்கமான ஜெட் எரிபொருளைவிட இதற்கு மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகம் செலவாகும்.
திங்கட்கிழமை தொடங்கிய மூன்றுநாள் 11வது ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெட்ராய்ட் சென்றுள்ள அமைச்சர் ஈஸ்வரன், அங்கு நடந்த நிலையான விமான எரிபொருள் முதலீட்டு உச்சநிலை மாநாட்டில் பேசினார்,

