சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 4 விழுக்காட்டினர் பக்கவாதத்தால் பாதிப்படைகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
பக்கவாதத்தால் பாதிப்படைந்துள்ளதாக சந்தேகப்படுவோர் காலம் தாமதிக்காமல் பரிசோதனை செய்து சிகிச்சையைத் தொடங்காவிட்டால் மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையடுத்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்கள் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் முனைப்பில் 'ராபிட்ஏஐ' என்னும் செயற்கை நுண்ணறிவு சோதனைக்கருவியைத் தற்போது பயன்படுத்துகின்றனர்.
சிகிச்சைக்கு 5 நிமிடங்கள் தாமதமானாலும் அந்தக் குறுகிய நேரத்தில் பக்கவாத நோயாளிகளின் மூளைத்திசுக்கள் மின்னல் வேகத்தில் அழிக்கப்படுவதால் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் செயல்படும் இந்தப் புதிய சோதனைமுறையை, முதன் முதலாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மேற்கொண்டுள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளின் சிகிச்சைமுறையில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சோதனைக் கருவி மூலம் பயன்களைக் காண முனைப்புடன் இருக்கிறார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் நோய்க்குறி படமெடுப்புப் பிரிவு இடையீட்டுக் கதிர்வீச்சியல் தலைவரும் மூத்த நிபுணருமான சார்புநிலை இணைப் பேராசிரியர் அனில் கோபிநாதன்.
புதிய சோதனைக் கருவித் திட்டத்தை வழிநடத்தும் மருத்துவர்களில் ஒருவரான அவர், "விரைவாக சிகிச்சை அளித்து நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து வரமால் தடுப்பது ஒரு மருத்துவரின் பணி மட்டுமின்றி கடமையும்கூட.
"குறிப்பாக, பக்கவாதத்தை எடுத்துக்கொண்டால் நேரம் போகப் போக நோயாளியின் மூளைத்திசுக்கள் சீக்கிரம் சேதமடைந்து விடுகின்றன.
"புதிய தொழில்நுட்பத்தின் உதவியால் எங்களால் உடனடியாக முடிவு எடுத்து நோயாளிக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூடுகிறது.
"இதன் வேறொரு பயனாக பக்கவாத நோயாளி குணம் அடைந்து மறுவாழ்வு அமர்வுகளுக்குச் சென்றாலும் அவர்கள் விரைவில் வீடு திரும்பிவிடலாம்," என்றார்.
பக்கவாதம் ஏற்பட்டால் நோயாளிகளின் மூளையில் இருக்கும் பெரும்பான்மையான ரத்தக் குழாய்களும் தடுக்கப்படுவதால் மூளைத்திசுக்கள் செயலிழந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. ரத்த ஓட்டத்தை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வர, அறுவை சிகிச்சை மூலம் ரத்த உறைவு அகற்றப்படும்.
படமெடுப்பு நுட்பம் வழி நோயாளி சிகிச்சைக்குத் தகுதி பெற்றுள்ளாரா என்பது தீர்மானிக்கப்படும். அதன்மூலம் கிடைக்கும் தரவை 'ராபிட்ஏஐ' என்றழைக்கப்படும் இந்த சோதனைக்கருவி ஒரு நிமிடத்திற்குள் தயார் செய்து மருத்துவர்களுக்குத் தேவைப்படும் படங்களை உருவாக்க முற்படும்.
படங்களை வைத்து மருத்துவர்களால் எளிதில் சிகிச்சை சார்ந்த முடிவுகளை எடுக்கவும் சாமர்த்தியமாக நேரத்தைத் திட்டமிடவும் முடியும்.
அனுஷா செல்வமணி
கி.ஜனார்த்தனன்

