காத்தோங் - ஜூ சியாட் வட்டாரவாசிகளும் அங்கு செல்வோரும் அடுத்த ஆண்டு தெரு விழாக்கள், வழிகாட்டுதலுடன் கூடிய சுற்றுலாக்கள், உரை நிகழ்வுகள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
தேசிய மரபுடைமை வாரியம் நேற்று அறிமுகப்படுத்திய 'நம் எஸ்ஜி மரபுடைமைத் திட்டம் 2.0' எனும் ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள 'மரபுடைமைச் செயல்பாட்டு முனைகள்' திட்டம் அதற்கு வழிவகை செய்கிறது.
இந்த ஐந்தாண்டுத் திட்டமானது 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுவரை மரபுடைமை, அரும்பொருளகத் துறைக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.
அடையாளம், தொழில், புத்தாக்கம், சமூகம் ஆகிய நான்கு அங்கங்களில் இத்திட்டம் அக்கறை செலுத்தும்.
இவற்றில் சமூகம் என்ற அங்கத்தின்கீழ் 'மரபுடைமைச் செயல்பாட்டு முனைகள்' திட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு முனையும் சமூகக் குழுக்களால் வழிநடத்தப்படும்.
சமூக, கலாசார, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் பெரனாக்கான் அரும்பொருளகத்தில் இந்த மரபுடைமை 2.0 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசிய நூலக வாரியம், வடிவமைப்பு சிங்கப்பூர் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து, நவநாகரிகம், வரைகலை வடிவமைப்பு, கட்டடக்கலை போன்ற பலதரப்பட்ட வடிவமைப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை உருவாக்க மரபுடைமை வாரியம் திட்டமிட்டு இருக்கிறது.
இவ்வட்டார வரலாறு, அழகியலுக்கு உட்பட்டு சிங்கப்பூரின் அடையாளத்தைப் புரிந்துகொள்ளவும் சிங்கப்பூர் வரலாற்றை, இவ்வட்டாரத்துடனும் உலகத்துடனும் நம் நாட்டிற்கு உள்ள தொடர்பைச் சிறப்பாக எடுத்துக்காட்டவும் அத்தொகுப்பு உதவும் என்று வாரியம் தெரிவித்தது.
அத்தொகுப்பு தொடர்பான விவரங்கள் பின்னொரு நாளில் அறிவிக்கப்படும்.
உள்ளூர் மரபுடைமைத் தொழில்துறைக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் ஆதரவு வழங்கும் வகையில், கைவினைத்திறம், படைப்பாற்றலுடன் கூடிய வட்டாரமாக ஆர்மீனியன் ஸ்திரீட் உருமாற்றம் பெறவுள்ளது.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் கைவினைக்கலை, பாரம்பரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்படும்; தற்காலிகக் கடைகள் ஏற்படுத்தப்படும்.
யுனெஸ்கோ புலனாகாக் கலாசார மரபுடைமைப் பட்டியலுக்குச் சிங்கப்பூர் அடுத்து முன்மொழியப்படும் அம்சம் எது என்பதை அறிவிக்கவும் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரின் உணவங்காடிக் கலாசாரம் கடந்த 2020 டிசம்பரில் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.