சிங்கப்பூர் தனது எரிசக்தி மீள்திறனை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அவ்வகையில், எரிசக்திச் சந்தை ஆணையம் ஜூரோங் தீவில் ஒரு புதிய மின்னாலையை அமைக்கவிருக்கிறது.
'ஓசிஜிடி' எனும் எரிவாயு விசைச்சுழலிகள் இரண்டு அந்த மின்னாலையில் இடம்பெறும்.
அந்த ஆலை 2025 ஜூனில் செயல்பாட்டிற்கு வரும்போது அவ்விசைச்சுழலிகள் ஒவ்வொன்றும் 340 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.
இயற்கை எரிவாயு அதன் முதன்மை மூலப்பொருளாக இருக்கும். இருப்பினும், டீசல் எரிபொருளாலும் அவை இயங்கவல்லவை.
அவ்விரு விசைச்சுழலிகளும் 30 விழுக்காடு வரை ஹைட்ரஜனையும் மூலப்பொருளாக எடுத்துக்கொள்ளும். உரிய மேம்பாடுகளைச் செய்தால், அவை முழுமையாக ஹைட்ரஜனாலும் இயங்க முடியும்.
எதிர்பாராத வகையில் மின்விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை ஈடுகட்டவும் இடையூறுகள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும் இந்த முக்கிய எரிசக்திக் கட்டமைப்பு உதவும் என்று ஆணையம் தெரிவித்தது.
நேற்று இடம்பெற்ற புதிய மின்னாலைக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கலந்துகொண்டார்.
"கடும் வெயிலை இப்போது நாம் எதிர்கொண்டுவரும் சூழலில், தற்போது செயல்பாட்டில் உள்ள 'ஓசிஜிடி' விசைச்சுழலிகள் உச்ச வேளையில் தொடர்ந்து மின்சாரத்தை விநியோகித்து வருகின்றன," என்று டாக்டர் டான் கூறினார்.
'சிசிஜிடி' எனப்படும் ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு விசைச்சுழலிகளுடன் கூடிய மின் ஆலைகளே செயல்திறன்மிக்கவை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், மற்ற 'சிசிஜிடி'க்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்க நேர்ந்தால் அவ்வகை மின்னாலைகளால் விரைவில் உற்பத்தியைத் தொடங்க முடியாது.
'சிசிஜிடி'க்கள் முழு உற்பத்தி அளவை எட்ட 14 மணி நேரம் வரை ஆகலாம். அந்த விசைச்சுழலி இயங்கத் தொடங்கி, குறைந்தது ஆறு மணி நேரம் இயங்கிய பிறகே அதனை நிறுத்த இயலும்.
அதுபோல, நிறுத்தப்பட்டபின் குறைந்தது ஆறு மணி நேரம் கழித்தே அதனை மீண்டும் இயக்க முடியும்.
இப்போதுள்ள 'ஓசிஜிடி' விசைச்சுழலிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் உள்ளன என்றும் அவற்றை மாற்ற வேண்டிய வேளை வந்துவிட்டது என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஆணையத்தின் துணை நிறுவனமாக 'மெராந்தி பவர்', 'ஓசிஜிடி' விசைச்சுழலிகளுடன் கூடிய புதிய மின்னாலையை அமைக்கும் பணியை மேற்கொள்ளும்.

