மேலும் இருவரை 'ஸிக்கா' தொற்றியிருப்பதை அடுத்து, சிங்கப்பூரில் இவ்வாண்டு அத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியம் வியாழக்கிழமை இரவு ஃபேஸ்புக் வழியாக இத்தகவலை வெளியிட்டது.
பாதிக்கப்பட்டோரில் நால்வர் கோவன் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள். இன்னொருவர் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
'ஏடிஸ்' கொசுக்கள் மூலம் 'ஸிக்கா' தொற்று பரவுகிறது. இவ்வகைக் கொசுக்களே டெங்கி, சிக்குன்குன்யா தொற்றுகளுக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஸிக்கா' தொற்றால் பாதிக்கப்படுவோரிடம் மூன்று முதல் 14 நாள்களுக்குக் காய்ச்சல், சொறி, மூட்டுவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படலாம். ஆயினும், பெரும்பாலான 'ஸிக்கா' நோயாளிகளிடம் எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை.
கடந்த 2020 மார்ச்சில் இருந்து சிங்கப்பூரில் எவரையும் 'ஸிக்கா' தொற்றாத நிலையில், சென்ற ஆண்டு அதனால் இருவர் பாதிக்கப்பட்டனர்.

