சபிதா ஜெயகுமார்
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வறுமைச் சூழலிலிருந்து விடுபட்டு சமுதாயத்தில் முன்னேற்றம் பெற உறுதுணையாகத் திகழ நோக்கம் கொண்டுள்ளது '=டிரீம்ஸ்' எனும் இலாப நோக்கமற்ற அமைப்பு.
ஓரறை வீடுகளில் வளர்ந்த பிள்ளைகள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உகந்த சூழலை உருவாக்கித் தரும் வகையில் '=டிரீம்ஸ்' விடுதி அமைந்துள்ளது. 99, ஹெய்க் சாலை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த விடுதியில் மாணவர்கள் தங்குவதற்கான அறைகளும் விளையாட்டரங்கமும் உள்ளன.
இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள ஏதுவாக அங்கு வகுப்புகள் இடம்பெறும். அவர்கள் தங்களது உடல்நலனை மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டங்களும் உண்டு.
"குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன.
"மாணவர்கள் இங்கேயே தங்கி, எங்கள் கண்காணிப்பில் இருக்கும்போது, கூடுதல் உதவியை வழங்க முடிவதுடன் ஒவ்வொரு மாணவருக்கும் என்னென்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து செயல்படுவது எளிதாகிறது," என்று '=டிரீம்ஸ்' அமைப்பின் தலைவர் ஸ்டான்லி டான் கூறினார்.
தங்களோடு சேர்ந்து பயணம் செய்யும் மாணவர்கள் வறுமையிலிருந்து வெளிவருவது மட்டும் அல்லாது பல பரிமாணங்களிலும் முன்னேற்றம் கண்டு மெருகேறிய மாணவராக வளர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் திரு டான் சொன்னார்.
"=டிரீம்ஸ்" விடுதித் திட்டத்தில் சேர விரும்பும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலோடு நிலையத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு அம்மாணவர்களும் பெற்றோரும் விடுதியை நேரில் காண அழைக்கப்படுவர். அப்போது, '=டிரீம்ஸ்' அமைப்பின் திட்டம் குறித்தும் பிற மாணவர்களுடன் சேர்ந்து வசிப்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படும்.
மேல்விவரங்களுக்கு https://dreamssingapore.org.sg/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.

