மியன்மார் ராணுவத்துக்கு சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட நிறுவனங்கள் US$254 மில்லியன் (S$342 மில்லியன்) மதிப்புள்ள பல்வேறு தளவாடங்களை அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது.
அது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சு தயங்காது என்று தெரிவித்தார்.
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டாம் ஆண்ட்ரூஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், மியன்மாருக்கு பொருள்கள் அனுப்புவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதியளித்ததா அல்லது பொருள்கள் அனுப்புதலில் சம்பந்தப்பட்டுள்ளதா என்று குறிப்பிடப்படவில்லை. அந்தப் பொருள்கள் 2021 பிப்ரவரி முதல் 2022 டிசம்பர் வரை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம், குறைந்தது US$1 பில்லியன் (S$1.35 பில்லியன்) மதிப்பிலான ஆயுதங்கள், ஆயுத உற்பத்திக்கான மூலப் பொருள்களை, 2021 பிப்ரவரியில் நிகழ்ந்த ராணுவ ஆக்கிரமிப்புக்குப் பிறகு மியன்மார் இறக்குமதி செய்துள்ளது என்று விரிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா, சீனா, இந்தியா, தாய்லாந்து ஆகியவை இந்த ஏற்றுமதியில் சம்பந்தப்பட்டுள்ளன என்று கூறிய அறிக்கை, சிங்கப்பூரைப் பொறுத்தவரை இங்கிருந்து 138 தனிப்பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து பொருள்கள் மியன்மாருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 45 நிறுவனங்களின் விரிவான விவரங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இவ்வாண்டு மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில் எந்தெந்த பொருள்கள் அனுப்பப்பட்டன, அவற்றின் மதிப்பு என்ன, ஆயுதங்களின் விவரங்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் சிங்கப்பூர் நிறுவனங்கள் கொண்டிருந்த பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவை இருந்தன.
இது குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் சமர்ப்பித்த தகவல்களுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார். அந்தத் தகவல்கள் குற்றங்கள் தொடர்பான புலனாய்வுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
ஆயுதமற்ற அப்பாவி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மியன்மாரின் ராணுவத்துக்கு உதவும் எவ்வித பொருள் ஏற்றுமதிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதியளிக்காது என்றும் அமைச்சு மேலும் விவரித்தது.
"மியன்மாருக்கு எதிராக ஐ.நா, பொதுச் சபையில் கொண்டு
வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக சிங்கப்பூர் எப்போதும் செயல்படும். அதேவேளையில், மியன்மார் மக்களுக்கு உதவும் அனைத்துவித மனிதாபிமான முயற்சிகளுக்கும் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
"சக ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து மியன்மாரில் அமைதியை மீண்டும் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் கூட்டாகச் செயல்படுத்தப்படும்," என்றும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.