அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கராஜூ சுப்பையாவின் விசாரணையின்போது அவருக்கு உரைபெயர்ப்பாளரோ, வழக்கறிஞரோ வழங்கப்படவில்லை, அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார் போன்ற பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காக சிலருக்கு திருத்த உத்தரவை, பொஃப்மா எனும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் தொடர்பான அலுவலகம் நேற்று பிறப்பித்தது.
இந்த உத்தரவின்படி, சமூக ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான், வழக்கறிஞர் எம்.ரவி, டிஜேசி அமைப்பு, டிஓசி ஏஷியா மற்றும் டிஓசி இணை நிறுவனர் ஆண்ட்ரூ லோ ஆகியோர் தங்கள் ஊடகப் பதிப்புகளுக்குப் பக்கத்தில் திருத்தத்தை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சின் அறிக்கை கூறியது.
ஒரு கிலோவுக்கு மேலான எடை கொண்ட கஞ்சாவைக் கடத்திய குற்றத்துக்காக 46 வயது சிங்கப்பூரரான தங்கராஜூ, ஏப்ரல் 26ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இதன் தொடர்பில் திருவாட்டி ஹான், ஏப்ரல் 19, 22ஆம் தேதிகளில் சமூக ஊடகத்தில் கட்டுரை வெளியிட்டார். திரு ரவி, ஏப்ரல் 20, 28ஆம் தேதிகளில் இரு ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டார். டிஜேசி ஏப்ரல் 28ஆம் தேதியும் திரு லோ ஏப்ரல் 24ஆம் தேதியும் தங்கள் ஃபேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டனர்.
இவை அனைத்தும் பொய்யான தகவல்கள் என உள்துறை அமைச்சு தெரிவித்தது.

