பெரும்பாலும் தீவின் பிரபலமான மத்திய பகுதியில் உள்ள குறைந்தது எட்டு புதிய கூட்டுரிமை வீட்டுத் தொகுதி மேம்பாட்டாளர்கள் தங்கள் வீடுகளை வாங்க ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விலைக் கழிவுகளை ஏப்ரல், மே மாதங்களில் வழங்கியுள்ளனர் என்று பிசினஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.
64 வீடுகள் கொண்ட 'ஒன் டிரேகோட்' தொகுதியில் உள்ள இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் விலை $2.2 மில்லியன் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முந்தைய விலை $2.7 மில்லியன்.
10வது வட்டாரத்தில் உள்ள அந்த வீட்டுத் தொகுதி, 2018ல் விற்பனை தொடங்கப்பட்டதிலிருந்து 19 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. 732 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டின் விலை $2.3 மில்லியன். 1,345 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டின் விலை $3.5 மில்லியன்.
வட்டாரம் ஒன்பதில் உள்ள 'தி அட்டிலியர்' வீட்டுத் தொகுதியில் உள்ள 120 வீடுகளில் 46 ஏப்ரலில் விற்கப்பட்டு விட்டன. அப்போது சில வீடுகளுக்கு விலைக் கழிவு கொடுக்கப்பட்டது.
நியூட்டன் பகுதியில் உள்ள அந்த வீட்டுத் தொகுதி 2021 பிப்ரவரியில் விற்பனையைத் தொடங்கியது. இம்மாதம் 18ஆம் தேதி நிலவரப்படி வீட்டுத் தொகுதியின் 94 வீடுகள் விற்கப்பட்டு விட்டன.
"நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ஆகக் கடைசி மேம்பாட்டாளர்களின் விற்பனை விவரங்களைப் பார்க்கையில், 'தி அட்டிலியர்' வீட்டுத் தொகுதியில் ஏப்ரலில் ஒரு சதுர மீட்டருக்கு $2,658 என்று விற்கப்பட்டது.
"ஒப்புநோக்க, 2021 மார்ச்சில் ஒரு சதுர மீட்டருக்கு $2,916 என்று விற்கப்பட்டது. இது சராசரி விலையைக் காட்டிலும் 8.8% குறைவு.
"அப்போது நான்கு வீடுகள் மட்டுமே விற்கப்பட்டது தெரிய வந்தது," என்று சிபிஆர்இ நிறுவனத்தின் தென்கிழக்காசிய ஆய்வுப் பிரிவின் தலைவர் ட்ரிஷியா சோங் தெரிவித்தார்.

