லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊழியருக்கு ஐந்து வாரச் சிறையும் அபராதமும்
இரண்டு கடலுணவு நிறுவன பிரதிநிதிகளுக்கு மற்ற ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள உதவி செய்யதாகக் கூறி அவர்களிட மிருந்து மொத்தம் $4,320 லஞ்சம் பெற்ற என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் முன்னாள் ஊழியருக்கு நேற்று ஐந்து வாரச் சிறையும் $2,000 அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
சுவா டியாவ் ஹிம் (படம்) எனும் அந்த 61 வயது ஆடவர் 2009லிருந்து 2021 நவம்பர் வரை ஃபேர்பிரைசில் வேலை செய்து வந்தார். சம்பந்தப்பட்ட கடல் உணவு பிரதிநிதிகளிடமிருந்து $3,600 லஞ்சம் பெற்றது, அவர்களுக்குள் இருந்த வாட்ஸ்அப் உரையாடல் அவருக்கு எதிராக எடுத்துக்கொள்ளப்படலாம் என்ற சந்தேகத்தில் அதனை அழித்தது என இரு குற்றச்சாட்டுகளை சுவா ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிப்பின்போது எஞ்சியுள்ள லஞ்சத் தொகையும் கருத்தில் கொள்ளப்பட்டது. பெற்ற லஞ்சப் பணத்திலிருந்து $500ஐ சுவா, கடலுணவு நிறுவன பிரதிநிதி ஒருவரிடம் திரும்ப கொடுத்துவிட்டார். அதைக் கருத்தில் கொண்டு சுவா தண்டப்பணமாக $3,820ஐ செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இது குறித்து கருத்துரைத்த ஃபேர்பிரைஸ் குழுமம், இச்சம்பவத்துக்குப் பிறகு கொள்முதல் செயல்முறை குறித்து விரிவான மறுபரிசீலனை செய்யப்பட்டு, தனது கட்டுப்பாடு மற்றும் ஆளுமை முறைகளைப் பலப்படுத்தி இருப்பதாகக் கூறியது.
உரிமமில்லா கட்டணச் சேவை வழங்கிய ஆடவருக்கு ஐந்து வாரச் சிறை
சிங்கப்பூரில் உரிமமில்லாமல் கட்டணச் சேவை வழங்கிய 26 வயது ஆடவருக்கு நேற்று ஐந்து வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தாஸ் அஷிஷ்குமார் எனும் அந்த ஆடவர், மற்றவர் தனது வங்கிக் கணக்கில் பணம் போடுவதற்கு அனுமதியளித்தார் என்று தெரிவித்த காவல்துறை அதன் மூலம் தாஸின் கணக்கில் 2020 செப்டம்பரில் US$78,850 (S$106,190) பணம் போடப்பட்டது.
தாஸ் சம்பந்தப்பட்டவரிடம் தனது ஏடிஎம் அட்டை, மறை எண், இணைய வங்கி விவரங்களை ஆகிய வற்றைத் வழங்கியுள்ளார். இரண்டு நாள்களுக்குப் பிறகு தாஸின் வங்கிக் கணக்கிலிருந்து US$45,150 தொகை ரொக்கமாகவும் நிதி பரிமாற்றமாகவும் எடுக்கப்பட்டது. அந்தத் தொகை, பணம் அனுப்புதல் மோசடி நடவடிக்கை கள் மூலமாக வந்தது என்று சந்தேகிக்கப்பட்டது.
2021 மார்ச்சில், வெளிநாட்டில் உள்ள பணம் அனுப்புதல் மோசடிக் கும்பலிடமிருந்து தாஸின் வங்கிக் கணக்கில் US$34,650யும் US$10,500யும் வரவு வைக்கப் படவிருப்பதாக சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் அந்தப் பணத்திலிருந்து தாஸ் $23,900 பணத்தை தனது கணக் கிலிருந்து எடுத்திருக்கிறார் அல்லது மற்ற கணக்குக்கு மாற்றி விட்டிருக்கிறார் என்று புலனாய்வில் தெரிய வந்தது. சிங்கப்பூரில் தாஸ்போல மேலும் இருவரும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளனர் என்றும் காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால், அந்த மூவரிடமும் இதுபோன்ற கட்டணச் சேவை வர்த்தகம் புரிய உரிமம் இல்லை. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட குற்றத் துக்காக தாஸ் கடந்த புதன்கிழமை கைதானார்.
சட்டவிரோதமாகக் கணினியில் தகவல் தேடத் தூண்டியவருக்கு 2 வாரச் சிறை
வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரின் விவரங்களைக் கணினியில் தேடித் தர டிபிஎஸ் வங்கியின் ஊழியர் ஒருவரைத் தூண்டியதற்காக ஆங் கோக் ஹாவ் எனும் ஆடவருக்கு நேற்று இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆங், ஒரு மாதுக்கு $23,000 கடன் கொடுத்திருந்தார். அந்த மாது தனது பணத்தைத் திருப்பி தரவில்லை. அப்போது ஆங், டிபிஎஸ் வங்கி ஊழியரான லியோங் யான் சின்னின் உதவியை நாடினார். மாது பற்றிய விவரங்களைச் சட்டவிரோதமாகக் கணினியில் தேடித் தர லியோங் சம்மதித்தார்.
அப்போது 32 வயதான லியோங்குக்கு கடந்த ஆண்டு நவம்பரில் 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேலும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார். லியாங்கும் ஆங்கும் சூதாட்டம், கூடைப்பந்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆங்குக்கு நேற்று $10,000 பிணை வழங்கப்பட்டது. அவர் தனது தண்டனையைத் தொடங்க ஜூன் 5ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

