டி4ஐ (D4I) என்ற பகிரங்க புத்தாக்க இணையத்தளம் இந்த ஆண்டில் தனது மூன்றாவது ஆண்டுச் சேவையைத் தொடர்கிறது.
ஒன்றாகச் சேர்ந்து சமூகத்திற்கு உரிய தீர்வுகளை உருவாக்க முன்வரும்படி அது சமூக உணர்வு உள்ள புத்தாக்க வல்லுநர்களை அழைக்கிறது.
சிங்கப்பூரில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைக் கைதூக்கி விடுவது என்பது இந்த ஆண்டின் சவால்.
இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டவர்கள் கல்வி, நிதி நிர்வாகம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்தனர்.
அந்தச் சவால் போட்டியில் ஐவர் கொண்ட குழு ஒன்றும் பங்கெடுத்தது. 'மைண்ட்ஸ்' என்ற சமூக சேவை அமைப்பின் உதவி நிர்வாகியான திருவாட்டி ஏரியல் குவீ, 31, என்பவர் அந்தக் குழுவில் இடம்பெற்று இருந்த ஒருவர். இவர் அந்த அமைப்பில் ஏழு ஆண்டுகள் சமூக சேவை ஆற்றியவர்.
ஊழியர்கள் முதலாளிகளைத் தேடி வேலையில் அமர்வதற்கான வேலை சந்தைகள்தான் பொதுவாக நடத்தப்படுகின்றன.
ஆனால் அதையே நேர் மாறாக மாற்றி அறிவு மந்த குறைபாடு உள்ள ஊழியர்களைத் தேடி முதலாளிகள் வரும் வகையில் அந்தக் குழு வேலை சந்தை யோசனை ஒன்றை முன்வைத்தது.
அந்தச் சந்தையில் ஊழியர்கள் தங்கள் ஆற்றலை, திறனை, நாட்டங்களை வெளிப்படுத்துவார்கள். அவர்களைப் பார்த்து முதலாளிகள் வேலைக்குத் தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
டி4ஐ சவால் போட்டியில் மூன்று குழுக்கள் வெற்றி பெற்றன. அவற்றுக்குப் பரிசு கொடுக்கப்பட்டது.
அவற்றில் மைண்ட்ஸ் குழு ஒன்று. மூன்று குழுக்களுக்கும் தலா $10,000 நிதி வழங்கப்பட்டது. அதை கேபிட்டல் அண்ட் ஹோப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு கொடுத்தது.
அந்தக் குழுக்கள் அந்த நிதியைக்கொண்டு தங்கள் யோசனைகளைச் சமூகத்தில் முன்னோடித் திட்டமாக அமலாக்கலாம்.

