புதிய பிடாடாரி வீடமைப்புப் பேட்டைக்கான பணிகள் நிறைவை நெருங்குகின்றன.
அந்த வட்டாரத்தில் திட்டமிடப்பட்டதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிடிஓ வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அங்கு மொத்தம் 8,872 வீடுகளைக் கட்டுவது திட்டம்.
அவற்றில் 6,418 வீடுகள் கட்டப்பட்டு வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 2,454 வீடுகள் 2025ஆம் ஆண்டுவாக்கில் கட்டி முடிக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஞாயிற்றுக்கிழமையன்று (21 மே) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, தீவு முழுவதும் ஐந்து புதிய பிடிஓ திட்டங்களை மே 30ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அது தெரிவித்தது.
இவற்றில் கிட்டத்தட்ட 5,500 வீடுகள் இடம்பெறும்.
கடந்த 2013ஆம் ஆண்டு சிங்கப்பூரின் நான்கு வட்டாரங்களில் 12 பிடிஓ திட்டங்கள் தொடங்கப்படும் என்று முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.
அதில் பிடாடாரி வீடமைப்புத் திட்டமும் அடங்கும்.
அல்காஃப், பார்ட்லி ஹைட்ஸ், பார்க் எட்ஜ், உட்லீ ஆகியன அந்த நான்கு வட்டாரங்கள்.
இவற்றில் முதலாவதாக உட்லீ வட்டார வீடுகளைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அந்த வட்டார வீடமைப்பு ஏற்பாடுகளை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
312 வாடகை வீடுகள் உட்பட 2,685 பிடிஓ வீடுகள் உட்லீயின் கட்டப்பட்டுள்ளன.
உட்லீ கிலென், உட்லீ ஹில்சைட். உட்லீ வில்லேஜ் ஆகிய மூன்று பிடிஓ திட்டங்கள் இந்த வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று திட்டங்களுக்குட்பட்ட வீடுகள் அனைத்தும் 2022 செப்டம்பருக்கும் 2023 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகவும் அது கூறியது.
இந்த வீடுகளைக் கட்டியெழுப்பும் பணிகள் 2020ஆம் ஆண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டபோதிலும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன.
இவ்வாண்டு ஏப்ரல் இறுதி வாக்கில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை அவற்றை வாங்கியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதிய வீட்டுக்கான சாவியை வீட்டு உரிமையாளர்கள் வாங்கிச் சென்றனர்.
இதர வட்டாரங்களைப்போலவே பிடாடாரி வட்டாரத்தின் பிடிஓ திட்டங்களும் கொள்ளைநோய்ப் பரவலால் தாமதமடைந்ததாக அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
"கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக வீட்டு உரிமையாளர்களின் வாழ்க்கைத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பொறுமையுடனம் புரிந்துணர்வுடனும் காத்திருந்ததற்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்றார் திரு லீ.
மேலும், சிங்கப்பூரர்களின் வீடமைப்புக்கான தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்ப புதிய வீடுகள் தொடர்ந்து கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
5,500 வீடுகளைக் கட்ட மே 30ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் ஐந்து பிடிஓ திட்டங்களில் இரண்டு தெங்காவிலும் மற்றவை பிடோக், சிராங்கூன் மற்றும் காலாங்/வாம்போவிலும் நிறைவேற்றப்படும் என்றார் திரு லீ.