வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) விடு ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து சுமார் 160 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (20 மே) இரவு நிகழ்ந்தது.
வீட்டின் படுக்கை அறையில் மின்சைக்கிள் மின்கலன் தீப்பிடித்துக்கொண்டதால் அசம்பாவிதம் நேர்ந்ததாக நம்பப்படுகிறதென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அப்போது மின்கலனுக்கு மின்னூட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
12வது மாடியில் இருக்கும் வீட்டில் தீ மூண்டதாக சனிக்கிழமை இரவு 11.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததென குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் கூறியது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ மூண்ட வீட்டில் அறுவரைக் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது.
மின்சைக்கிள்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆகியவற்றின் மின்கலன்களுக்கு நீண்ட நேரம் மின்னூட்டவேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை மக்களுக்கு நினைவூட்டியது.
அதோடு, போலியான மின்கலன்களை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்றும் அது குறிப்பிட்டது.