மக்கள் கழக ஏற்பாட்டில் 'பிஏ கிட்டிஸ்' என்ற செயல்திட்டம் நேற்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 56 சமூக நிலையங்கள், சமூக மன்றங்களில் நடக்கிறது.
அந்தச் செயல்திட்டத்தில் 160 வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றில் கலந்துகொள்வதன் மூலம் பள்ளிச் சிறார்கள், தங்களுடைய இந்த விடுமுறை காலத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு தங்களுக்கு விரும்பிய துறைகளில் ஆற்றலைப் பலப்படுத்திக் கொள்ளலாம்.
அந்தச் செயல்திட்டம் நேற்று ஃபெர்ன்வேல் சமூக மன்றத்தில் நடந்தது. அதில் 20 ஜோடி தந்தையரும் பிள்ளைகளும் கலந்துகொண்டு காலை உணவு தயாரித்தனர்.
முகம்மது ஓவியாஸ், 48, என்பவர், தன்னுடைய 10 வயது புதல்வர் முகம்மது முஷ்ஸினுடன் கலந்துகொண்டார்.
"இந்தப் பயிலரங்கு கலந்துறவாடுவதாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு ரொட்டி உணவு தயாரித்தோம். மிகவும் கேளிக்கையாக இருந்தது. என்னுடைய மகனைப் பற்றி நான் பலவற்றையும் தெரிந்துகொண்டேன்.
"வீட்டில் என் மகனுடன் மட்டுமன்றி என் மகளோடும் சேர்ந்து இதுபோன்று கலந்துறவாடி உணவுத் தயாரிப்பில் ஈடுபட விரும்புகிறேன்," என்று திரு முகம்மது கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளுடன் பல வகை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.
சுற்றுச்சூழல், பசுமை எரிபொருள் பற்றி எல்லாம் அவர்கள் கற்றுக்கொண்டனர்.

