சிங்கப்பூர் மக்கள் தொகை தொடர்ந்து மூப்படைந்து வருகிறது. இந்நிலையில், அறுவை சிகிச்சையை நாடும் முதியோர்எண்ணிக்கை அதிகரிக்கிறது.
டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் டாக்டர் ஹாவ் குவாங் இயோங் இதுபற்றி தெரிவிக்கையில் 80 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள முதியோர் சிக்கலான மலக்குடல் அறுவை சிகிச்சை செய்துகொள்வது ஐந்து ஆண்டுகளுக்கு முன் 15% ஆக இருந்தது.
அது சென்ற ஆண்டில் 20%க்கும் அதிகமாகிவிட்டது என்றார்.
அதே வயதுப் பிரிவினரில், மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் விகிதம் 4%ல் இருந்து 10%ஐ கடந்துவிட்டது.
கடந்த மூன்றாண்டுகளில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டோர் அளவு 5%லிருந்து 9% ஆக கூடி இருக்கிறது என்றும் அந்த மருத்துவர் கூறினார்.
பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதியோர் எண்ணிக்கை 2019க்கும் 2022க்கும் இடையில் 30 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூ டெக் புவாட் மருத்துவமனை கூறியது.
அவற்றில் 70% சிகிச்சைகள் நோயாளிகளே விரும்பி செய்துகொண்டவை.
ஆயுள் அதிகரித்து இருப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று டாக்டர் ஹாவ் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் மக்களின் சராசரி ஆயுள் 1980ல் 72 ஆண்டுகளாக இருந்தது. அது 2021ல் 83 ஆண்டுகளாகியது.
சிங்கப்பூர் வரும் 2026வது ஆண்டுவாக்கில் 'மிக மூப்புச்' சமூகமாக ஆகிவிடும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஏப்ரல் மாதம் தெரிவித்தார்.
அத்தகைய ஒரு சமூக மக்களில் குறைந்தபட்சம் 21%க்கு வயது 65ஐ கடந்து இருக்கும்.
"முதியோருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதில் அதிக ஆபத்துகள் இருக்கின்றன.
"அதேநேரத்தில் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவம் பற்றிய அறிவு மக்களிடையே கூடி இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் ஏற்படக்கூடிய நன்மை களை மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்," என்று இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் கெவின் யிக் தெரிவித்தார்.
முதியோருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டால் ஓராண்டு கழித்து அதனால் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்பு 25%. ஆனால், அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அத்தகைய வாய்ப்பு 10%ஆகக் குறைந்துவிடும் என்று அவர் விளக்கினார்.

