சபிதா ஜெயகுமார்
சிங்கப்பூர் மரபுடைமை விழா-2023, இம்மாதம் முதல் தேதியில் தொடங்கி இம்மாதம் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் 20வது முறையாக நடக்கும் அந்த விழாவில் விளையாட்டுகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றின் வரலாற்றை மையமாகக் கொண்டு மரபுடைமை போற்றிக் கொண்டாடப்படுகிறது.
தேசிய மரபுடைமைக் கழகம் இந்திய கலாசார அமைப்புகளுடன் இணைந்து கருப்பொருளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.
மரபுடைமை விழாவின் ஓர் அங்கமாக இந்திய மரபுடைமை நிலையத்தில் பொதுமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.
லிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதையில் சிறப்பு வழிகாட்டி பயணங்களிலும் பொதுமக்கள் பங்கெடுத்தனர்.
லிட்டில் இந்தியாவைச் சுற்றி உள்ள முக்கிய பாரம்பரிய இடங்கள், முன்பு மக்களின் விளையாட்டு மையமாக இருந்த ஃபேரர் பார்க் பகுதி முதலிய இடங்களுக்கு வழிகாட்டி ஒருவர் அழைத்துச் சென்று வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்தார்.
"விழாவின் கருப்பொருளை மையமாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் இவ்வாண்டின் நிகழ்ச்சிக்குத் தனித்தன்மை கூட்டியுள்ளன," என்று இந்திய மரபுடைமை நிலையத்தின் திட்ட மேலாளர் திரு சுரேன் ராமதாஸ் குறிப்பிட்டார்.
மக்கள் தேர்ந்தெடுத்து பங்கெடுக்க மூன்று விதமான வழிகாட்டிப் பயணங்கள் இருந்தன.
சிராங்கூன் பகுதியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வரலாறு உலா; சமயங்கள் குறித்த புரிதலை வளர்த்துக்கொள்ள பக்தி உலா; பல்வேறு விதமான பொருட்களை வாங்க விரும்புவோருக்கு லிட்டில் இந்தியாவை சுற்றியுள்ள கடைகளைச் சென்று பார்க்கும் உலா ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.
மரபுடைமை விழாவில் களரிப் பயிற்சிப்பள்ளியும் இணைந்து சிலம்பம் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பழமையான இந்திய தற்காப்புக் கலையான சிலம்பத்தில் புதைந்திருக்கும் சக்தியையும் அழகையும் பயிலரங்கு உணர்த்தியது.
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்த சிலம்பம் இன்று பெண்களுக்கும் வரவேற்பு அளிக்கிறது. கூச்சம் இன்றி பெண்கள் சிலம்பம் கற்க ஊக்குவிக்கிறது களரி.
பயிலரங்கில் கலந்துகொண்டோர் சிலம்பாட்டத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டதுடன் அதன் அடிப்படை அசைவுகளையும் கற்றுக்கொண்டனர்.
"தமிழர்களின் மரபைக் கட்டிக்காக்கும் வகையில் சிலம்பத்தை அதிகமானோருக்கு அறிமுகப்படுத்த இப்பயிலரங்கு வழிவகுத்தது. இன்றைய நவீன உலகில் பழமை வாய்ந்த தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டுவது நோக்கம்," என்று களரி பயிற்சிப்பள்ளியின் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவித்தனர்.

