சிங்கப்பூரில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு களுடன் வியர்க்குரு, கொப்புளம் போன்ற தோல் பிரச்சினைகளுடன் மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
தேசிய பல்கலைக்கழக சுகாதார நிறுவனத்தின்கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் மே மாதம் முதல் அத்தகையோரின் எண்ணிக்கை வாரம் ஒன்றுக்கு நான்கு பேராகக் கூடி இருக்கிறது.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக போகும் அத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
தசை இறுக்கம், தசைப் பிடிப்பு, அதனால் ஏற்படக்கூடிய வலி, களைப்பு, உடல் வலி, வேகமான இதயத் துடிப்பு, உடலில் நீர்ச்சத்து குறைந்துபோவது முதலான பலவும் வெப்பம் உடலில் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் உள்ளடங்கும்.
வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பக்கவாதம் மிகவும் மோசமானது. உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.
இந்தப் பாதிப்பு வந்தவர்களுக்கு உடலில் பல உறுப்புகள் செயல்படாமல் போய்விடுவதும் உண்டு.
இது பற்றி கருத்து கூறிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசரகால மருந்துத் துறையின் ஆலோசகர் டாக்டர் ஓங் பெய் யுயின், சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகரித்து இருப்பதே இத்தகைய நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்றார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்குச் சிறிய அளவில்தான் பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். சென்ற மாதத்தில் யாரும் மருத்துவமனையில் படுக்கையில் சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
கடும் வெய்யிலில் வெளிப்புறங்களில் வேலை பார்ப்பவர்கள் அல்லது வெளிப்புறங்களில் உடற்பயிற்சி போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடுவோருக்கு வெப்பத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூ டெக் புவாட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் கனக் நாயுடு கூறினார்.
வீட்டில் சரியான காற்றோட்டம் இல்லை என்றால் வீட்டின் உள்ளேயே இருக்கும் முதியோருக்கும் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும் என்றாரவர்.
வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருந்தகங்களுக்குப் பலரும் செல்கிறார்கள்.
வெப்பநிலை கூடும்போது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.
முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளிப்புறங்களில் கடும் உடல் உழைப்பு செயல்களில் தீவிரமாக ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எடை குறைந்த, இறுக்கமற்ற, வெளிர்நிற ஆடையை அணிய வேண்டும். எளிதாக செரிக்கக்கூடிய உணவை, பழங்கள், காய்கறிகள் போன்ற நீர் சத்து அதிகம் உள்ளவற்றை உண்ண வேண்டும்.
வெப்பநிலை கூடியிருப்பதால் தோல் பிரச்சினைகளும் மோசமடைந்து இருப்பதாக சில மருத்துவமனைகளும் மருந்தகங்களும் தெரிவிக்கின்றன.

