சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளோரும், கடைசியாக பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு ஓராண்டு ஆகியிருந்தால், ஈராற்றல் பூஸ்டர் தடுப்பூசியை இன்னமும் போட்டுக்கொள்ளாமல் இருந்தால் அந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கடைசியாக ஊசி போட்டுக்கொண்டதற்கு ஐந்து மாதம் கழித்து அல்லது அதற்கும் அதிக மாதங்களுக்குப் பிறகு முதியோர் அந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச பாதுகாப்புக்குத் தேவையான தடுப்பூசிகளை முற்றிலும் போட்டுக்கொண்டு இராதவர்கள் கூடுமானவரை விரைவாக அவற்றைப் போட்டுக்கொள்ளும்படி கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர் குழு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த வாரங்களில் கொவிட்-19 தொற்று அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர் என்று அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்தது.
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடிய சாத்தியம் அதிகம். ஈராற்றல் தடுப்பூசியையும் அவர்கள் போட்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடும்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள கொவிட்-19 நோயாளிகளில் கணிசமானோர் குறைந்தபட்ச பாதுகாப்புக்குத் தேவையான தடுப்பூசிகளை இன்னமும் போட்டுக்கொள்ளவில்லை என்று குழு குறிப்பிட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ளவர்கள் குறைந்தபட்சம் மூன்று எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை அல்லது நோவாவேக்ஸ் தடுப்பூசிகளை அல்லது நான்கு சினோவேக்-கொரோனாவேக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளும்படி குழு வலியுறுத்தி உள்ளது.
கொவிட்-19 தொற்று அதிகரித்து இருப்பதற்கு உருமாறிய ஓமிக்ரான் கிருமிதான் காரணம்.
ஈராற்றல் தடுப்பூசி மருந்து அந்த உருமாறிய கிருமிகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமானால் போதிய அளவுக்குப் பாதுகாப்பு ஆற்றலை உடலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு தடுப்பூசி அவசியமானது. குறிப்பாக 60 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள முதியோருக்கு இது மிக முக்கியம்.
முதியோர், மருத்துவ ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்போர் கூடுமான வரை விரைவாக ஈராற்றல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

