சிங்கப்பூரில் குடும்பச் சொத்துகளை நிர்வகிக்கும் அலுவலகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை அத்தகைய 182 புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
சென்ற ஆண்டில் 690 அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 672 ஆக இருந்தது. 'ஹேன்ட்ஷேக்ஸ்' என்ற கணினித் தகவல் பகுப்பாய்வு நிறுவனம் இவ்வாறு தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் திறக்கின்ற இத்தகைய அலுவலகங்கள்தான் இவற்றில் அதிகம். சீனா, மலேசியா, ஹாங்காங்கைச் சேர்ந்த அலுவலகங்களும் அண்மைய ஆண்டுகளில் இங்கு செயல்படத் தொடங்கி உள்ளன.
கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் செயல்பட்ட இத்தகைய அலுவலகங்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு இருந்தவற்றைவிட அதிகம் என்று பகுப்பாய்வு நிறுவனம் கூறி உள்ளது.
ஒரு குடும்பச் சொத்தை நிர்வகிக்கும் தனி குடும்ப அலுவலகங்கள் எண்ணிக்கை 2021 ஆண்டு முடிவில் கிட்டத்தட்ட 700 ஆக இருந்தது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கணிக்கிறது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 400தான் என்பது குறிப்பிடத்தக்கது.

