டிபிஎஸ் ஆண்டு லாபம்
$10 பில்லியனைத் தாண்டும்
டிபிஎஸ் குழுமம், மூன்று முதல் ஐந்து ஆண்டு காலத்தில் தனது வருடாந்திர லாபம் சாதனை அளவில்
$10 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறது. அந்தக் குழுமத்தின் நிதி ஆதாரம் வலுவாக உள்ளது. மின்னிலக்க உருமாற்றமும் இதற்குக் காரணம் என்று குழுமம் தெரிவித்துள்ளது.
பங்குமுதல் வருவாய் 15% முதல் 17% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய வங்கியாகத் திகழும் டிபிஎஸ், திங்கள்கிழமை முதலீட்டாளர் தினத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.
இவற்றை வைத்துப் பார்க்கையில் வட்டி விகிதம் வழக்கமற்ற குறைந்த நிலைக்குத் திருப்பவில்லை என்றே கணிக்க முடிகிறது. இந்தக் குழுமம் சென்ற ஆண்டு $8.2 பில்லியன் லாபம் ஈட்டியது. அது 2021ஆம் ஆண்டு லாபத்தைவிட 20% அதிகம்.
டிபிஎஸ் வங்கியின் முதல் காலாண்டு நிகர வருவாய் $2.57 பில்லியன். இது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் விஞ்சிவிட்டது.
இந்தியா, இந்தோனீசியா, தைவானில் அதிக வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகவும் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
உயர் கட்டடங்களில் பசுமை வளம்: இலக்கை நெருங்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூரில் உயர் கட்டடங்களில் பசுமைத் தாரவங்களை வளர்த்து பசுமை வளத்தை அதிகமாக்கும் தேசிய பூங்காக் கழகத்தின் முயற்சிகள் புதிய மைல்கல்லை எட்டி இருக்கின்றன.
இன்றைய தேதியில், சுமார் 155 ஹெக்டர் உயர் கட்டட பசுமை சாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பரப்பளவு 155 காற்பந்து திடல்களின் பரப்புக்குச் சமமானது. சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030ன்கீழ் 200 ஹெக்டர் உயர கட்டட பசுமையைச் சாதிக்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது.
இந்த இலக்கை நிறைவேற்ற கழகத்தின் உயர் கட்டட பசுமை ஊக்குவிப்புச் செயல்திட்டம் இந்த ஆண்டு மார்ச் முதல் 2026 மார்ச் வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இப்போதுள்ள கட்டடங்களின் கூரைகளைப் பசுமையாக்கவும் செங்குத்து பசுமை வளத்தை உருவாக்கவும் ஆகும் செலவில் பாதிவரை இந்தச் செயல்திட்டம் மூலம் பெறலாம்.
பாதுகாவல் துறையில் முப்பரிமாண தொழில்நுட்பம்
சிங்கப்பூரில் பாதுகாவல் துறையில் ஊழியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதைச் சமாளிக்க கட்டட உரிமையாளர்களும் பாதுகாவல் நிறுவனங்களும் முப்பரிமாண தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களையும் பயன்படுத்தி மின்னிலக்க சாதனங்களை உருவாக்கி வருகிறார்கள்.
பாதுகாவல் அதிகாரிகள், ஒரு தளபத்திய நிலையத்தில் இருந்தபடியே அந்த மின்னிலக்கச் சாதனங்களையும் புகைப்படச் சாதனங்களின் நேரடி காணொளிகளையும் பயன்படுத்தி ஒரு கட்டடத்தைக் கண்காணிக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் சாதனம் தகவல்களை அலசி ஆராய்ந்து ஒரு கட்டடத்தில் எந்த அளவுக்குக் கூட்டம் இருக்கிறது என்பது பற்றியும் பாதுகாவல் பிரச்சினைகள் குறித்தும் எச்சரிக்கை தகவல்களை அனுப்பி அதிகாரிகளை விழிப்பூட்டும்.
இந்தத் தொழில்நுட்பம் ஒரு கட்டடத்தின் அல்லது ஓர் இடத்தின் நடப்பு நிலைமையை உடனுக்குடன் அதே நேரத்தில் தெரியப்படுத்தி விழிப்பூட்டுவதால் ஊழியர் தேவை குறைகிறது என்று 'விஸ்ஸியோ டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஜோ லீ கூறினார். இதில் முப்பரிமாண தொழில்நுட்பம் மேலும் உதவும். ஊழியர்கள் தேவை பாதியாகக் குறையும். செலவு மிச்சமாகும் என்றார் அவர்.

