தீவு விரைவுச்சாலையில் விபத்து; நால்வருக்குக் காயம்

தீவு விரைவுச்சாலையில் விபத்து; நால்வருக்குக் காயம்

1 mins read
be9b29ff-6f9b-46cb-903e-e4db786312b6
ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைப் பகுதியில் விபத்து நிகழ்ந்தது. படம்: SGROAD BLOCKS_TRAFFIC NEWS / டெலிகிராம் -

தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் காயமடைந்த நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஒரு டாக்சியும் ஒரு லாரியும் விபத்துக்கு உள்ளாயின.

விபத்து திங்கட்கிழமையன்று நிகழ்ந்தது.

நீல நிறத்தில் உள்ள லாரியின்கீழ் டிரான்ஸ்கேப் டாக்சியின் முன்பகுதி நசுங்கியிருந்த காட்சியைக் கொண்ட காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.

திங்கட்கிழமை இரவு 8.25 மணிக்கு விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததென காவல்துறை தெரிவித்தது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்தது.

டாக்சியின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவரும் பின்னிருக்கைகளில் இருவரும் சிக்கியிருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது டாக்சியின் 52 வயது ஓட்டுநர் நினைவிழந்த நிலையில் இருந்தார்.

லாரியில் இருந்த 36 வயது பயணி, டாக்சியில் இருந்த 70 வயதைத் தாண்டிய இரு பயணிகள் ஆகியோரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது அவர்களுக்கு நினைவு இருந்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.