மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், ரிடவ்ட் ரோடு சொத்துகள் குறித்த மறுஆய்வு ஒன்றை நடத்தவிருக்கிறார்.
பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரநிலைகளை அரசாங்கம் கட்டிக்காப்பதை உறுதிசெய்ய இந்த மறுஆய்வு இடம்பெறவேண்டும் என்றார்.
தாங்கள் மேற்பார்வையிடும் அமைச்சுகளுக்கும் அமைப்புகளுக்கும் சுயேச்சையாக மறுஆய்வு நடத்தக் கோரி சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் தம்மிடம் பேசியதாக திரு லீ குறிப்பிட்டார்.
"உண்மை விவரங்களை எடுத்துரைக்கும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நான் கேட்டிருக்கிறேன்.
"இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்து, முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை உறுதிசெய்து, தவறு ஏதேனும் புரியப்பட்டு உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு மூத்த அமைச்சர் டியோவிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.
"மறுஆய்வை விரைந்து ஆற்றலுடன் நடத்தி, நாடாளுமன்றம் கூடுவதற்கு ஏதுவாக முடிவுகளை வெளியிடுமாறும் மூத்த அமைச்சர் டியோவிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்," என்று திரு லீ கூறினார்.
திரு சண்முகமும் டாக்டர் பாலகிருஷ்ணனும் முறையே எண் 26, எண் 31 ரிடவ்ட் ரோட்டில் வாடகைதாரர்களாக இடம்பெற்ற நிலவரம் குறித்து உரையாடல்கள் எழுந்துள்ளன.
அவ்விரு காலனித்துவ பங்களா வீடுகள் குறித்து சீர்திருத்த கட்சித் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்தினம் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து உரையாடல்கள் உருவெடுக்கத் தொடங்கின.
மே ஆறாம் தேதி திரு ஜெயரத்தினம் வெளியிட்ட பதிவு ஒன்றில், "அத்தகைய விலையுயர்ந்த சொத்துக்கு எப்படி அமைச்சர்களால் சந்தை வாடகையைச் செலுத்த முடிகிறது என்பதைப் பார்ப்பது சிரமமாக உள்ளது," என்று கூறியிருந்தார்.
சிங்கப்பூர் நில ஆணையம் மே 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அவ்விரு சொத்துகளும் திரு சண்முகத்துக்கும் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
அவ்விரு சொத்துகளும் பல ஆண்டுகளாக காலியாக இருந்தன என்றும் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட நடைமுறைகளுக்கு முழுமையாக உட்பட்டே அவை வாடகைக்கு விடப்பட்டன என்றும் ஆணையம் கூறியிருந்தது.
ரிடவ்ட் ரோடு சொத்துகள் அமைச்சர்களுக்கு எப்படி வாடகைக்கு விடப்பட்டன என்பது குறித்த விவரங்களையும் ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
தனக்கு எத்தனை ஏலக் கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன என்பது பற்றியோ சொத்துகள் எவ்வளவு வாடகைக்கு விடப்பட்டன என்பது பற்றியோ ஆணையம் கூறவில்லை.
ஜூலையில் நாடாளுமன்றம் அடுத்து கூடும்போது இந்த விவகாரம் குறித்து மேல்விவரம் வழங்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தின்போது இது குறித்த கேள்விகளைத் தாங்கள் கேட்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.