தமிழக தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் தமிழ் முரசுக்குப் பேட்டி
ஆ. விஷ்ணு வர்தினி
தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை அமைச்சராக பதவியேற்று 13 நாள்களே ஆன நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையளித்துள்ளார்.
அவர், தமிழகத்தின் மிக முக்கிய வளமான இளையரைப் பொருளியல் வளர்ச்சியிலும் நாட்டு மேம்பாட்டிலும் மையமாக கருதி செயல்படும் முனைப்பில் உள்ளார்.
வளர்ச்சி சிறப்புகளை முன்னிறுத்தி தமிழகத்தை அடையாளப்படுத்துவது, பசுமைப் பொருளியல், செயற்கை நுண்ணறவு, வான்வெளித் துறை, மின்னிலக்கமாக்கல் போன்ற வளர்ந்துவரும், எதிர்காலத்துக்குத் தேவையான துறைகளுக்கு முன்னுரிமை; தொழில்சார்ந்த கல்வித் திட்டங்கள் வழி திறனாளர்களைப் பெருக்குவது, வேலை வாய்ப்பைப் பெருக்கும் முதலீடுகள் என்று தமது முன்னுரிமைத் திட்டங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் 46 வயது உளவியல் துறை முனைவரான திரு ராஜா.
தொழில்துறை, பொருளியல், மக்களின் வாழ்க்கைத்தரம் என அனைத்திலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்கூறும் விதமாக தமிழகத்தின் அடையாளத்தை மாற்றியமைத்து பொலிவூட்டுவது திரு ராஜாவின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்று.
வாய்ப்புகளும் வளங்களும் நிறைந்த தமிழகத்தின் பொருளியல் சூழலை முதலீட்டாளர்கள் விரிவாக அறிவது இன்றிமையாதது எனக் கருதும் இவர் இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் இது சாத்தியமாகும் என்றாரவர். பன்முகத்தன்மைவாய்ந்த முதலீடுகளை ஈர்ப்பது, நீண்டகால நிலைத்தன்மைகொண்ட வேலைவாய்ப்புகளைப் பலதரப்பினருக்கும் ஏற்படுத்துவது எனும் இலக்குகளுடன் தமது அமைச்சு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 தொழிற்பேட்டைகள் வேலை வாய்ப்புக்கான முக்கிய மையங்களாய் திகழ்கின்றன.
கூடுதலான துறைகளில் தொழிற்பேட்டைகளை எழுப்புவதுடன், நவீன உலகின் விசைப்பொறிகளாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது முன்னுரிமையாய் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் செயல்படுத்தப்பட்ட தமிழகத்தின் மின்சார வாகனக் கொள்கை தமிழகத்தை தெற்காசியாவிலேயே மின்சார வாகன உற்பத்திக்கான சிறந்த தளமாக ஆக்கும் எனும் நம்பிக்கை நிலவுகிறது.
நீடித்த நிலைத்தன்மைக்கு இட்டுச் செல்லும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்க தமிழகம் ஆர்வம் கொண்டுள்ளது.
இந்தியாவின் வான்வெளி தொழில்நுட்பத்துக்கான மையப்புள்ளியாக தமிழகம் விளங்கும் கனவையும் அவர் முன்வைத்தார்.
இத்துறைகளில் பாகுபாடற்ற, எட்டுமளவிலான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது அமைச்சு கொண்டுள்ள திட்டங்களில் பிரதானமாக உள்ளது.
இந்தியாவிலேயே பணிபுரியும் பெண்கள் அதிகம் கொண்டுள்ள மாநிலம் தமிழகமே. ஆக அதிகளவில் தொழில்மயமான மாநிலமும், ஆக அதிகமான நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட மாநிலமும் அதுவே.
"இந்தியாவிற்கே நுழைவாயிலாக விளங்குகிறது தமிழகம். பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பண்பாடு ஆகியவை அங்கு தழைக்கின்றன. தமிழக மாணவர்களைத் தொழில்துறைக்குத் தயார்படுத்தும் கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது," என்றாரவர்.
சிங்கப்பூரின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை ஒத்த தமிழகத்தின் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து திறன் மேம்பாடு, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல் முதலியவற்றை அரசு வழங்கி வருகிறது.
இது பற்றி கூறுகையில், "கல்விக்கழகங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை அகற்றி ஒத்திசைவு ஏற்படுத்துவது ஒரு முக்கிய இலக்காக உள்ளது," என்றார் அமைச்சர்.
தொழில்துறை வல்லுநர்களை மாணவர்களுடன் இணைக்கும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு அமைப்பு ஒன்றினை நிறுவும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவ தாகக் கூறிய அமைச்சர், மாணவர் மேம்பாடு தொடர்பில் சிங்கப்பூரின் திட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமானவை இருப்பதாகவும் கூறினார்.
உலகத்திற்கே ஒரு பொருளியல் மையமாகத் திகழும் சிங்கப்பூர் இந்தியாவுடன் நீண்டகால இணக்கங்களைக் கொண்டுள்ளது என்ற அமைச்சர், பொருளியல், தொழில்துறை, பாரம்பரியம் என பல வகைகளில் இரு நாடுகளும் கொண்டுள்ள உறவுகளை குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் மாணவர்களின் பரந்த கண்ணோட்டம் குறிப்பிடத்தக்கதென கூறிய அவர், தற்போதைய சிங்கப்பூர்த் தமிழர்களைப் போலவே அடுத்த தலைமுறையினரும் தமிழகத்தின் தொழில்துறை மேம்பாட்டில் பங்கு வகிப்பர் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழர்கள் சிங்கப்பூரில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.அவர்களுக்குத் தோள்கொடுக்கும் கூடுதல் திட்டங்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றாரவர்.
அமைச்சராக அவர் மேற்கொண்டிருக்கும் முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் இது. அடுத்து ஜப்பானுக்கும் மற்ற நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஜனவரியில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமாக இந்த வெளிநாட்டுப் பயணங்கள் அமைவதாக அமைச்சர் ராஜா குறிப்பிட்டார்.
தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் சிங்கப்பூரின் அடித்தளக் கூறு அமைச்சரின் மனதில் ஆழ பதிந்த ஒன்றாகும். அமரர் திரு லீ குவான் இயூவின் ரசிகராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், 'எல்லோருக்கும் எல்லாம்' எனும் கொள்கையை தமது அரசியல் முறையில், ஆளுமையில் முன்னிலைப்படுத்துகிறார்.
திரு ராஜா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மகனாவார். தந்தையின் நிழலிலன்றி தமக்கென ஓர் அடையாளம் பதிக்கவேண்டும் என்பது இவரது விருப்பம்.