சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றமின்றி இருந்தது. விடுமுறைகால செலவும் விமானப் பயணச்சீட்டுக் கட்டணமும் அதிகமாக இருந்ததே காரணம். அது முந்தைய மார்ச் மாதம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
மூலாதார பணவீக்கம் மார்ச் மாதத்தைப் போலவே கடந்த ஏப்ரல் மாதம் 5% கூடியது.
மூலாதார பணவீக்கம் என்பது தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவினத்தைச் சேர்க்காமல் கணக்கிடப்படுவதாகும்.
ஆகையால், அது சிங்கப்பூர் குடும்பங்களின் செலவுகளைத் துல்லியமாக பிரதிபலிப்பதாக இருக்கும். ஏப்ரலில் மூலாதார பணவீக்கம் 4.7% ஆக இருக்கும் என்று புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் கணித்துக் கூறி இருந்தார்கள்.
ஆனால் அதைவிட அதிகமாக பணவீக்கம் கூடியது. என்றாலும் பிப்ரவரி மாதத்துடன் (5.5%) ஒப்பிடுகையில் ஏப்ரலில் பணவீக்கம் குறைவாக இருந்தது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில்தான் மூலாதார பணவீக்கம் ஆகஅதிகம்.
ஏப்ரலில் மின்சாரம், எரிவாயு, உணவு, சில்லறைச் செலவுகளும் இதர பொருள்களுக்கான செலவுகளும் குறைவாக இருந்தன.
ஆனால், பயணம் தொடர்பான செலவுகள் அதிகமாக இருந்ததால் அந்தக் குறைவுகளால் பலன் இல்லை.
சேவைகள், தனியார் போக்கு வரத்துச் செலவுகள் கூடியதால் ஒட்டுமொத்த பணவீக்கம் ஏப்ரலில் 5.7% ஆக அதிகரித்தது. இதுவும் புளும்பர்க் ஆய்வுக் கணிப்பைவிட (5.5%) அதிகம்.
இந்த ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5%க்கும் 6.5%க்கும் இடைப்பட்டு இருக்கும். அதேபோல் மூலாதார பணவீக்கம் 3.5% முதல் 4.5% வரை இருக்கும் என்பது அதிகாரபூர்வ கணிப்பாகும்.

