துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மே 27வரை ஜப்பான் பயணம்
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மே 23ஆம் தேதி (நேற்று) முதல் மே 27ஆம் தேதிவரை ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும் ஜப்பானிய அரசியல், தொழில்துறை தலைவர்களையும் துணைப் பிரதமர் சந்திப்பார். ஜப்பானில் சிங்கப்பூரர்கள் அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்வார்.
நிக்கெய் பங்குச்சந்தை ஏற்பாட்டில் நடக்கும் 28வது நிக்கெய் எதிர்கால ஆசியா கருத்தரங்கை ஒட்டி திரு வோங்கின் பயணம் இடம்பெறுகிறது.
'உலகச் சவால்களைச் சமாளிக்க ஆசியாவின் ஆற்றல்களைத் திறம்பட பயன்படுத்துவது' என்ற கருப்பொருளுடன் நடக்கும் அந்தக் கருத்தரங்கில் நாளை திரு வோங் உரையாற்றுவார்.
ஜி7 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள திரு வோங் சென்ற வாரம் ஜப்பான் சென்றிருந்தார். ஜப்பானுக்கு மீண்டும் வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நேற்று ஃபேஸ்புக்கில் அவர் கூறினார். பல்வேறு அமைச்சுகளையும் பொருளியல் வளர்ச்சிச் கழகத்தையும் சேர்ந்த அதிகாரிகள் துணைப் பிரதமருடன் சென்றுள்ளனர்.
நீக்குப்போக்கான வேலை இடம்: தேவை அதிகம்; செலவும் அதிகம்
விருப்பப்படி மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய நீக்குப்போக்கான வேலை இடங்களுக்கான தேவை
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற
ஆண்டில் 25% கூடியது. அத்தகைய இடங்களைப் பயன்படுத்த செலவும் அதிகமாகிவிட்டது என்று
"தி இன்ஸ்டண்ட் குரூப்' என்ற அனைத்துலக வேலையிட சிறப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் இருந்தபடி வேலை பார்க்கும் ஏற்பாட்டை நிறுவனங்கள் முற்றிலும் கைக்கொண்டு இருக்கின்றன.
ஏதோ ஒருவகை ஏற்பாட்டில் அலுவலகத்திற்கு வந்து ஊழியர்கள் வேலை பார்க்க ஊக்குவிக்கும் நிறுவனங்கள் அதிகமாகி உள்ளதாக அறிக்கையில் அது கூறியது.
நீக்குப்போக்கான வேலை இடங்களுக்குத் தேவை அதிகரிக்கிறது என்றாலும் அத்தகைய புதிய அலுவலங்கள் எண்ணிக்கை மெதுவாகவே அதிகரித்து வருகிறது. ஆசியா பசிபிக் வட்டாரத்தில் பல நாடுகளிலும் இந்த நிலவரம் இருக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
சொந்த, சமூக நல்வாழ்வுக்குப் பாடுபட விரும்பும் சிங்கப்பூரர்கள்
சிங்கப்பூரர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள முயலும்பட்சத்தில் அவர்கள் தங்களைவிட வசதி குறைந்தோருக்கு உதவ அதிக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்பது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அண்மையில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவருகிறது.
மக்கள் தங்கள் வாழ்வுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள பாடுபடும்போது எஞ்சிய சமூகமும் நிறுவனங்களும் அரசாங்கமும் உதவிக்கரம் நீட்டும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இவ்வாறு தெரிவித்தார்.
முன்னேறும் எஸ்ஜி என்ற இயக்கத்தை ஒட்டி சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த இந்த அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக எஸ்ஜி கேர்ஸ் சமூகக் கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் பேசிய அமைச்சர், சிங்கப்பூரர்கள் தங்கள் நல்வாழ்வுக்காகவும் தங்கள் குடும்பம், சமூகத்தின் நல்வாழ்வுக்காகவும் கடுமையாகப் பாடுபட விரும்புகிறார்கள் என்றார்.
இதை ஒருபோதும் நாம் இழந்துவிடக்கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
குறைந்த வருமான குடும்பத்தினர் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பாடுபடுவதைக் கண்ணியமாக நினைப்பவர்கள் என்பது, அவர்களுக்கு உதவும் முயற்சிகள் இடம்பெறும்போது நினைவில் இருக்கவேண்டிய ஒன்று என்று அமைச்சர் கூறினார்.

