ஊழியர் பாதுகாப்பை மேம்படுத்த அடுத்த மாதத்திலிருந்து $5 மில்லியனுக்கும் அதிகமான திட்டங்களுக்கான கட்டுமானத் தளங்களில் காணொளி மூலம் கண்காணிக்கும் முறை கட்டாயமாக்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் தொடக்க விழா சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில்நேற்று நடைபெற்றது.
வேலையிட மரணங்கள், காயங்கள் ஆகியவற்றைக் குறைக்க பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அவற்றில் இந்தக் கட்டாய காணொளிக் கண்காணிப்பும் ஒன்று.
இந்தத் திட்டத்துக்காக பல கேமராக்களைக் கொண்ட கட்டமைப்பு, திரைகள், ஒளிப்பதிவுச் சாதனங்கள், காணொளிகள் ஆகியவை பயன்படுத்தப்படும்.
இந்த அணுகுமுறை, வேலை இடத்தில் பாதுகாப்பற்ற பழக்கவழக்கங்களைத் தடுக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான அபாயங்களை அடையாம் காணவும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டால் விசாரணை நடத்தவும் இந்த அணுகுமுறை பயன்படும்.
அதிக அபாயமிக்க நடவடிக்கைகள் நிகழும் கட்டுமானத் தளங்களில் காணொளிக் கண்காணிப்பு முறை கட்டாயம் தேவைப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள், இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்த ஏற்படும் செலவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று கூறினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பாக மிக மோசமான விதிமீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு இந்தக் காணொளிக் கண்காணிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இந்த அணுகுமுறை குறித்து திரட்டப்பட்ட கருத்துகள் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியது.
காணொளிக் கண்காணிப்பு முறையின் வழி கட்டுமானத் தளங்களில் உள்ள வேலையிடச் சூழலை முன்பைவிட உன்னிப்பாகக் கண்காணிக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அணுகுமுறையைத் தவிர்த்து, வேறு சில நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அரசாங்கத்தின் எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவது, அதிக அபாயம் உள்ள துறைகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், இயக்குநர்கள் ஆகியோர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பாதுகாப்பு தொடர்பான அரை நாள் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைப்பது ஆகியவையே அவை.
வேலையிடங்களில் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் படுகாயம் அடைந்த ஊழியர் விகிதம் அதிகரித்தது.
ஒவ்வொரு 100,000 ஊழியர்களில் 19.2 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததாகப் பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு 100,000 ஊழியர்களில் 16.8 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததாகப் பதிவானது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வேலையிட மரணங்கள் அதிகரித்தன.
அக்காலகட்டத்தில் 36 வேலை இட மரணங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு மொத்தம் 46 வேலையிட மரணங்கள் பதிவாகின. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களில் பாதுகாப்பு விழிப்புநிலை உயர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது. இருப்பினும், வேலையிடங்களில் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தது.
வேலையிடப் பாதுகாப்பு விழிப்புநிலைக்கான காலகட்டம் ஏற்கெனவே மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் அது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் இயக்கத்தின் தொடக்க விழாவில் பேசிய மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
வேலையிடப் பாதுகாப்பு விழிப்புநிலை அதன் இலக்கை எட்டிவிட்டதாக திரு ஸாக்கி கூறினார்.
ஊழியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முதலாளிகளுக்குப் புரிந்துவிட்டதாகவும் இதன் விளைவாக வேலையிட மரணங்கள் குறைந்திருப்பதாகவும் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.

