கல்வி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆகியவற்றில் சிங்கப்பூரும் கசக்ஸ்தானும் ஒத்துழைக்கலாம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஹலிமா கசக்ஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷி அவருடன் சென்றுள்ளார்.
கசக்ஸ்தானில் உள்ள நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தில் பேசியபோது இந்த மூன்று அம்சங்கள் தொடர்பாக சிங்கப்பூரும் கசக்ஸ்தானும் இணைந்து செயல்படலாம் என்று அதிபர் ஹலிமா கூறினார்.
வாழ்நாள் கற்றல், பெரியவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இருநாடுகளும் நன்கு புரிந்துவைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் நசர்பாயேவ் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை அவர் சுட்டினார்.
நசர்பாயேவ் பல்கலைக்கழகப் பொதுக் கொள்கைப் பள்ளியின் தற்போதைய தலைவர் சிங்கப்பூரரான பேராசிரியர் ஹுயி வெங் டாட் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியால் அங்கு பணியமர்த்தப்பட்டவர்.
மகளிருக்கு அதிகாரம் அளித்தல் பற்றி பேசும்போது சிங்கப்பூர் பட்டதாரிகளில் ஏறத்தாழ பாதி பேரும் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினரும் பெண்கள் என அதிபர் ஹலிமா தெரிவித்தார். இருப்பினும், பெண்களின் நிலையை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாலினச் சமத்துவத்தை மேம்படுத்த தேசிய அளவிலான அமைப்பை நிறுவிய முதல் மத்திய ஆசிய நாடாக கசக்ஸ்தான் திகழ்கிறது என்று அவர் புகழாரம் சூட்டினார்.
சிங்கப்பூருக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளாக அரசதந்திர உறவு இருந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மீண்டும் உறுதி செய்யப்
பட்டது. இருநாடுகளும் பல இன, பல சமய மக்களைக் கொண்டவை என்று தெரிவித்த அதிபர் ஹலிமா, பல சமயத்தினரிடையிலான கலந்துரையாடலை ஊக்குவிக்க 2019ஆம் ஆண்டிலும் இவ்வாண்டிலும் சிங்கப்பூர் நடத்திய ஒருங்கிணைந்த சங்கங்களுக்கான அனைத்துலக மாநாட்டுக்கு கசக்ஸ்தான் பங்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

