அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பயில இருக்கும் மாணவர்களுக்கான பதிவு வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று தொடங்குவதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
தங்களுக்கு விருப்பமான பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்ய 1, 2ஏ, 2பி, 2சி, 2சி (துணை) ஆகிய பிரிவுகளின்கீழ் இவ்வாண்டு முதல் பெற்றோர் இணையம் வழி தொடக்கநிலை 1 பதிவு இணையவாசலைப் பயன்படுத்தலாம்.
ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று இந்த இணையவாசலைப் பயன்படுத்தலாம். கல்வி அமைச்சின் தொடக்கநிலை 1 பதிவு இணையத்தளம் மூலம் புதிய இணையவாசலைப் பயன்படுத்தலாம்.
இவ்வாண்டிலிருந்து 1, 2ஏ, 2பி ஆகிய பிரிவுகளின்கீழ் விண்ணப்பம் செய்ய இணையம் வழி படிவத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக, புதிய இணையவாசலைப் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2சி, 2சி (துணை) ஆகிய பிரிவுகளின்கீழ் விண்ணப்பம் செய்ய தொடக்கநிலை 1 இணையக் கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.
இனி அப்பிரிவுகளின்கீழ் விண்ணப்பம் செய்யவும் புதிய இணையவாசலைப் பயன்படுத்த வேண்டும்.
புதிய இணையவாசலைப் பயன்படுத்த பெற்றோர் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
தொடக்கப்பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு நடத்தப்பட்ட தொடக்கநிலை 1 பதிவின் தரவுகளைக் கல்வி அமைச்சு வெளியிடும். இந்த அணுகுமுறை இவ்வாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
நேற்று முதல் https://www.moe.gov.sg/primary/p1-registration/past-vacancies-and-balloting-data எனும் இணையத்தளத்துக்குச் சென்று கடந்த ஆண்டின் பதிவு தொடர்பான தரவுகளைப் பெற்றோர் பெற்றுக்கொள்ளலாம்.
அதில் பள்ளிகளில் இருக்கும் காலியிடங்கள், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரிவுக்குக்கீழ் நடத்தப்பட்ட குலுக்கல் முறைக்கான முடிவுகள் ஆகியவை இடம்பெறும்.
தங்கள் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளிகளைப் பற்றி இந்த இணையத்தளத்திலிருந்து பெற்றோர் தெரிந்துகொள்ளலாம் என்று அமைச்சு கூறியது. அப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களைவிட கூடுதல் விண்ணப்பதாரர்கள் இருந்தார்களா என்பது குறித்து பெற்றோர் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாண்டு பதிவு நடவடிக்கையில் விண்ணப்பம் செய்யும் பெற்றோர் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் தகவல் அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து வழங்கப்படும்.
ஆனால் இணையப்பக்கத்திலிருந்து பெறப்படும் தரவுகள் மாறக்கூடும் என்று அமைச்சு கூறியது. பதிவு நடவடிக்கை நிறைவடைவதற்குள் பெற்றோர் தங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறலாம் என்றும் மாற்றங்களைச் செய்யலாம் என்றும் அது தெரிவித்தது.
கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் இல்லாத கூடுதல் தகவல்களையும் இந்த இணையத்தளத்தின்மூலம் பள்ளிகளால் வழங்க முடியும்.
பதிவு செய்யும்போது உதவி தேவைப்பட்டால் அந்தந்த பள்ளிகளுடன் பெற்றோர் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்யும் நாள்களில் காலை 9 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தொடர்புகொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு moe.gov.sg/primary/p1-registration எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
தொடக்கநிலை ஒன்றாம் வகுப்புக்கான பதிவு நடவடிக்கை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவுபெறும்.