சட்டவிரோத கும்பல் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 19க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 27 ஆடவர்களைக் காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.
மே மாதம் 21ஆம் தேதி, குற்றவியல் புலனாய்வுத் துறையின் குண்டர் கும்பல் பிரிவும் போக்குவரத்துக் காவல்துறையும் ஹவ்காங் அவென்யூ 3ல் நடத்திய கூட்டு நடவடிக்கையில், அந்த ஆடவர்களில் சிலர், குண்டர் கும்பல் சின்னங்களைக் கொண்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் கவசங்களுடனும் சட்டைகளுடனும் காணப்பட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியின் மேற்பார்வையில் 20க்கும் மேற்பட்டோர் சாலையோரமாக தங்கள் மோட்டார் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு சென்றதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன.
அந்த 27 ஆடவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் ஒழுங்குமுறை தொடர்பான மற்ற குற்றங்களுக்காக, நிலப் போக்குவரத்து ஆணையம் அவர்களிடம் விசாரணை நடத்தும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சட்டவிரோதக் கும்பல் உறுப்பினர்கள் என நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

