சிங்கப்பூரும் உஸ்பெகிஸ்தானும் பயணத்துறையில் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கண்டறியும்.
அது இரு நாடுகளுக்கும் இடையே அதிகமான இணைப்புக்கு வழிவகுக்கும்.
இரு நாடுகளும் பயணத்துறையையும் சுற்றுலாத் தளங்களையும் விளம்பரப்படுத்துவதற்கான ஆகச் சிறந்த நடைமுறைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
உஸ்பெகிஸ்தானின் அதிபர் அலுவலகமான குக்சரொய் மாளிகையில் பரிமாறிக்கொள்ளப்படுவதை அதிபர் ஹலிமா யாக்கோப்பும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியொயெவ்வும் ஒப்பந்தம் கையெழுத்தாவதைப் பார்வையிட்டனர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கும் உஸ்பெகிஸ்தான் காலாசார, பயணத்துறை அமைச்சுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம், பயணத் துறைக் கண்காட்சிகளில் பங்கெடுப்பது போன்ற தரமான பயணத்துறை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க, தனியார் துறைக்கும் உந்துதலாக அமையும்.
உஸ்பெகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் திருவாட்டி ஹலிமாவை அதிபர் மிர்ஸியொயெவ், குக்சரொய் மாளிகையில் வரவேற்றார்.
திருவாட்டி ஹலிமா, உஸ்பெகிஸ்தானுக்குச் சென்றிருக்கும் முதல் சிங்கப்பூர் அதிபராவார்.
இரு தலைவர்களும் பேராளர் கூட்டம் ஒன்றில், வர்த்தகம், முதலீடு, கலாசாரப் பரிமாற்றங்கள், பயணத்துறை மேம்பாடு, கல்வி உள்ளிட்ட ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றி கலந்துரையாடியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரும் உஸ்பெகிஸ்தானும் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் இணைந்துகொள்ள வாய்ப்பு இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரண்டு நாடுகளும் பல இன, பல சமய சமுதாயங்களைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று அமைச்சு கூறியது.

