வாங் செங் சியாங், 47 ஜின் யான், 36 இருவரும் இந்தோனீசிய பணிப்பெண்ணான 31 வயது லூட்டினை ஆறு மாதங்களுக்கும் மேலாக உடல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.
2017 ஜூலைக்கும் 2018 ஜனவரிக்கும் இடையில் இக்குற்றத்தை அவர்கள் புரிந்துள்ளனர்.
2018 ஜனவரியில் முகத்தில் பல காயங்களுடன் இருந்த திருவாட்டி லூட்டின், விளையாட்டு இடத்தில் மற்றொரு பணிப்பெண்ணைப் பார்த்தபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.
அப்பணிப்பெண் திருவாட்டி லூட்டினின் காயங்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டார். அதைப் பார்த்த மற்றொரு பணிப்பெண் அதிகாரிகளிடம் அதுகுறித்து கூறினார்.
'ஓசன்டெக் மரின் & ஆஃப்ஷோர்' பொறியியல் வடிவமைப்பு, ஆலோசனை நிறுவனத்தின் வாங்கும் இல்லத்தரசியாக இருக்கும் சீன நாட்டவரான ஜின்னும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஏழு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருவாட்டி லூட்டின், 2017 ஜூன் 24ஆம் தேதி நோவீனாவில் உள்ள அட்ரியா கொண்டோமினியத்தில் இருக்கும் தம்பதியரின் வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார்.
2017 ஜூலை மாதம் ஜின், பாத்திரங்களைச் சரியாகத் துடைக்கத் தவறியதால் பணிப்பெண்ணை அறைந்துள்ளார். அதையடுத்து ஜின், பணிப்பெண் முகவர் திருவாட்டி ஹாங் வான் யியை அழைத்தார்.
முகவரிடம் பேசிய பணிப்பெண் வேறு வீட்டுக்கு மாற விரும்புவதாகக் கூறியுள்ளார்.
அப்பொழுது முகவர் திருவாட்டி வான் யி, திட்டலாம் ஆனால் தாக்கக்கூடாது என்று ஜின்னிடம் கூறுவதாக பணிப்பெண்ணிடம் உறுதிகூறியுள்ளார். அதையடுத்து அவ்வீட்டில் தொடர்ந்து வேலை செய்ய திருவாட்டி லூட்டின் ஒப்புக்கொண்டார்.
ஆனால் துன்புறுத்தல் தொடர்ந்தது.
2017 அக்டோபரில், மற்றொரு சம்பவத்தில், மகன் சூடான குக்கரைத் தொட்டு விரல்கள் புண்ணானதால், ஜின் லூட்டினை அறைந்ததுடன் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர் கீழே விழக் காரணமானார். கீழே விழுந்த திருவாட்டி லூட்டினின் நெஞ்சில் உதைத்துள்ளார். அன்று வோங்கும் லூட்டினை அறைந்துள்ளார்.
இதன் பின்னரும் அறைவது, தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி உதைப்பது, விளையாட்டுப் பொருள் உடையும் வரை அதனால் அடித்தது என்று துன்புறுத்தல் தொடர்ந்தது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஜின்னும் அவரது கணவரும் மறுத்தனர்.
தண்டனைக் குறைப்பு வாதமும் அதைத் தொடர்ந்து தண்டனை விதிப்பும் ஆகஸ்டில் இடம்பெறும்.