தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சிங்கப்பூருக்கு முதல் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட திரு மு.க. ஸ்டாலினுக்கு நேற்று மாலை முகமலர்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகமும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். திரு ஸ்டாலினை வரவேற்று கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் ஒயிலாட்டம், சிங்க நடனம் ஆகியன மேளதாளங்களுடன் மேடையேறின.
பெருந்திரளான மக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். திரு சண்முகமும் திரு ஸ்டாலினும் தமிழர் பாரம்பரிய உடையில் காணப்பட்டனர்.
திரு ஸ்டாலினை நேரில் காண இளையர்கள் ஆர்வத்துடன் வந்திருந்ததைக் காணமுடிந்தது.
நிகழ்ச்சியில் பேசிய திரு சண்முகம், சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிக்கு இருப்பதுபோல தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்கும் நேரடி விமான சேவை இருந்தால் ஏராளமான மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும் என்றும் இந்த அம்சம் கவனிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"கொவிட்-19 முடிந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு ஆறு லட்சம் பயணிகள் வந்திருந்தனர்.
"இவ்வாண்டின் முதல் காலாண்டிலேயே இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது.
"தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கலாசார, பண்பாட்டு உறவுகள் சிறப்பாக இருக்கும் நிலையில் வர்த்தக உறவு இன்னும் மேம்பட வேண்டும்," என்றார் திரு சண்முகம்.
முதல்வரின் வரவேற்பில் பங்கேற்க ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
அவர்களில் ஒருவரான 41 வயது திருவாட்டி இ. சுவப்னா, இளம் தலைமுறையினர் அவசியம் தமிழக-சிங்கப்பூர் உறவு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
"ஸ்டாலின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலினையே அதிகம் கண்டுள்ளோம். தற்போது திரு ஸ்டாலின் சிங்கப்பூர்மீது கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் பிரம்மிக்கவைக்கிறது," என்றார் மாணவி அம்ரிதா.
தொடர்ந்து அதிவேகமாய் நவீனமயமாகும் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் என்னென்ன, கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் யாவை என்பன இந்நிகழ்வில் தெளிவு படுத்தப்பட்டது சிறப்பு என்றார், தமிழ்ப் பட்டிமன்ற கலைக்கழகத் தலைவர் திரு அருமை சந்திரன்.
60 தமிழ் அமைப்புகள் ஒத்திசைவுடன் ஒன்றுகூடியதை பாராட்டிய அவர், நிகழ்வு தமிழரின் பண்பாடு சிங்கப்பூரில் தொய்வின்றி தழைக்க ஊக்குவிக்கும் ஒரு நினைவூட்டல் என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தொழில்துறை எட்டுமளவிலான வேலைவாய்ப்புகளுடன் செழிக்காதா என்பது 51 வயது திரு ஹரி பாஸ்கரின் ஏக்கம்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து அவர் அகன்ற சமயத்தில் வேலைத்துறை நிச்சயமற்றதாய் இருந்தது.
"நீண்ட நெடிய வளர்ச்சிப் பயணத்தில் உருமாறியுள்ள தமிழக பணித்துறை தற்போதைய நவீன மேம்பாடுகளுடன் இணைந்து வளரவேண்டும்.
"தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிட்டது, செயற்கை நுண்ணறிவு நம்மை அச்சுறுத்துகிறது. இதற்கெல்லாம் ஈடுகொடுக்க என்ன திட்டங்கள் உள்ளன என அறிந்துகொண்டேன்," என்றார் அவர்.

