சிங்கப்பூரின் திறன்கள் தமிழ்நாட்டிற்குத் தேவைப்படுவதால் சென்னையில் 2024 ஜனவரியில் நடத்தப்பட இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இங்குள்ள நிறுவனங்கள் கலந்துகொண்டு முதலீடு செய்ய முன்வருமாறு சிங்கப்பூர் வந்துள்ள தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
'சிக்கி' எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் 'கைடன்ஸ் இந்தியா' அமைப்பும் நேற்று ஷங்ரிலா தமிழ்நாட்டு முதலீடு மாநாட்டை நடத்தின.
சிங்கப்பூரையும் இந்தியாவையும் சேர்ந்த சுமார் 350 வர்த்தகர்களும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். திரு ஸ்டாலின் முன்னிலையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சிங்கப்பூர் தரப்பினரும் தமிழகத் தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
"நகர நிர்வாகத்தில் அதிகபட்ச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திறமையாக பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சிங்கப்பூர், மற்ற நாடுகளுக்கு தர அளவுகோல். எங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழி ஆட்சிமொழிகளுள் ஒன்றாக இருப்பதனால் சிங்கப்பூரை நாம் வெளிநாடாக நினைப்பதில்லை,"
"சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்றுதொட்டே சிறப்பான உறவு நீடிக்கிறது. சிங்கப்பூரின் (அனைத்து) அரசு பள்ளிகளிலும் தொடக்கநிலை முதல் இளநிலை கல்லூரி வரை தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது என்பது தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என வாழ்ந்துவரும் எங்களுக்கு தேன்வந்து பாயுது எந்தன் காதினிலே என்பது போன்ற இனிய செய்தி," என்று திரு ஸ்டாலின் கூறினார்.
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் கடந்த ஆண்டு சென்னை வந்திருந்தபோது தம்மை சந்தித்ததையும் திரு ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
"திரு ஈஸ்வரனின் பண்பினால் மகிழ்ந்துபோன நான், அடுத்த பயணமாக சிங்கப்பூர் செல்லவேண்டும் என்று திட்டமிட்டேன். அவரைச் சந்தித்தபோது பொருளியல் உறவுகள், பண்பாடு மற்றும் வர்த்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசினோம்," என்றார் அவர்.
அசென்டாஸ், டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஐஇ சிங்கப்பூர் உள்ளிட்ட கிட்டத்தட்ட முப்பது சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஸ்டாலின், தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்தும்படி சிங்கப்பூர் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
"எங்களது முன்னேற்றப் பயணங்களில் இணைந்து அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த சிறப்பான பங்காளியாக சிங்கப்பூர் கைகோர்க்க வேண்டும் என இங்குள்ள நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம்," என்றார் திரு ஸ்டாலின்.

