சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு இங்குள்ள தொழிலதிபர்களை அழைக்கும் நோக்கிலும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தகர் மரபுடைமைச் சங்கத்தினருடன் மாநாட்டில் பங்கேற்குமுன் சிங்கப்பூரின் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு திரு ஸ்டாலின் நேற்று சென்று பார்வையிட்டார்.
தெமாசெக், கேப்பிட்டாலேண்ட் மற்றும் செம்ப்கார்ப் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலைகளை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அப்போது அந்த அதிகாரிகளை திரு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னையில் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக, தெமாசெக் தலைமை நிர்வாக அதிகாரி திரு தில்ஹான்பிள்ளை சந்திரசேகராவைச் சந்தித்தபோது, தெற்காசிய நாடுகளின் மாநிலங்களில் தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாகத் திகழ்கிறது என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் தெமாசெக் நிறுவனம் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது. ஏற்கெனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்தவும் புதிய கடல்சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் தெமாசெக் நிறுவனத்தை தமிழ்நாட்டு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்துதல் துறையில் தமிழ்நாடு 8 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. உணவைப் பதப்படுத்தும் மையங்களை நிறுவுவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவதால் அவற்றிலும் தெமாசெக் நிறுவனம் முதலீடு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் முதலீடு தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று அப்போது திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும், 'ஃபின்டெக் சிட்டி' என்னும் நிதி நிறுவனங்களுக்கான தனிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட வருவதாகவும் அவற்றில் முதலீடு செய்ய தெமாசெக் முயற்சி எடுக்குமாறும் அவர் தெரிவித்தார்.
செம்ப்கார்ப் மற்றும் கேப்பிட்டாலேண்ட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் ஸ்டாலின் சந்தித்தார்.

