அனைவரையும் உள்ளடக்கும் கருப்பொருளைக் கொண்ட தேசிய தின அணிவகுப்பு 2023

அனைவரையும் உள்ளடக்கும் கருப்பொருளைக் கொண்ட தேசிய தின அணிவகுப்பு 2023

2 mins read
04d47c6a-d87a-4e0f-aa75-5716db893464
-
multi-img1 of 2

கி.ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூ­ரின் 58ஆம் தேசிய தினக் கொண்­டாட்­டங்­கள் 'ஒன்­றி­ணைந்து முன்­னோக்­கிச் செல்­வோம்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் நடை­பெ­ற­வுள்­ளன.

இவ்­வாண்­டின் தேசிய தின அணி­வ­குப்பு, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று பாடாங் திட­லில் நடை­பெ­ற­வுள்­ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை, சிங்­கப்­பூர் காவல்­துறை ஆகி­ய­வற்­றின் கூட்டு இசைப்­ப­டை­யு­டன் யூஹுவா, போவன் உயர்­நி­லைப் பள்­ளி­க­ளின் இசைக்­கு­ழுக்­கள் பார்­வை­யா­ளர்­களை மகிழ்­விக்கவிருக்கின்றன.

அதி­ப­ருக்­கான மரி­யாதை பீரங்கி குண்டு முழக்­கம், கொடி­களு­டன் வலம்­வ­ரும் விமா­னங்­கள், வண்­ணப் புகை வெடி­கள் உள்­ளிட்ட வழக்­க­மான அம்­சங்­க­ளு­டன் புதி­தாக முழு­மைத் தற்­காப்பு அணி­வ­குப்­பும் இவ்­வாண்டு இடம்­பெ­றும்.

சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப்­படை தனது 55ஆம் நிறைவைக் கொண்­டா­டு­வ­தால் கூடு­தல் சிறப்­பு­டைய வான் சாக­சங்­க­ளை­யும் எதிர்­பார்க்­க­லாம்.

தேசிய தின அணி­வ­குப்பு குறித்த இந்­தத் தக­வல்­கள் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று வெளியிடப்பட்டன.

தேசிய தினத்­திற்­குச் சில நாள்­க­ளுக்கு முன்பு, தேசிய தினத்­தைய ஒட்­டிய கொண்­டாட்­டங்­கள் ஐந்து விளை­யாட்­ட­ரங்கங் ­­க­ளி­லும் தீவெங்­கும் உள்ள பல்­வேறு குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளி­லும் நடந்­தே­றும்.

'கெட் ஏக்­டிவ்!' சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­புப் பகு­திக்­கான விழா, எல்லா வய­துப் பிரி­வு­க­ளை­யும் சேர்ந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறையை ஊக்­கு­விக்­கும் குடும்ப நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்­டுள்­ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதிக்­கும் 6ஆம் தேதிக்­கும் இடையே பிடோக் விளை­யாட்­ட­ரங்கம், ஜூரோங் வெஸ்ட் விளை­யாட்­ட­ரங்கம், தோ பாயோ விளை­யாட்­ட­ரங்கம், உட்­லண்­டஸ் விளை­யாட்­ட­ரங்கம், அவர் தெம்­ப­னிஸ் ஹப் விளை­யாட்­ட­ரங்கம் (ஆகஸ்ட் 6ஆம் தேதி மட்­டும்) ஆகிய இடங்­களில் கொண்­டாட்­டங்­கள் நடை­பெ­றும்.

தேசிய தினத்­தன்று, போர்­விமா­னங்­கள் கொடி­க­ளு­டன் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளைக் கடந்து செல்­லும்.

தேசத்தை வலுப்­ப­டுத்­தும் சிறப்பு இயக்­கங்­கள்

பொது­மக்­களை ஈடு­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளின் வழி சிங்­கப்­பூர் மீதான நாட்டு மக்­க­ளின் கடப்­பாட்டை வலுப்­ப­டுத்­த­வும் தொண்­டாற்­று­தலை ஊக்­கு­விக்­க­வும் '#கிவ்­எஸ்­ஒன்­எஸ்ஜி' '#யுனைடெட்­எஸ்­ஒன்­எஸ்ஜி' ஆகிய இரண்டு இயக்­கங்­கள் இவ்­வாண்­டின் தேசிய தினத்தை ஒட்டி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

#கிவ்­எஸ்­ஒன்­எஸ்ஜி' இயக்­கம், தொண்­டூ­ழி­யத்­தை­யும் லாப நோக்­க­மற்ற இயக்­கங்­களில் பங்­கா­ளி­க­ளா­வ­தை­யும் ஊக்­கு­விக்க முனை­கிறது.

பல்­வேறு தளங்­கள் வாயி­லாக சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்றுகூடி விளை­யாட்டு, மர­பு­டைமை சார்ந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட '#யுனைடெட்­எஸ்­ஒன்­எஸ்ஜி' இயக்­கம் ஊக்­கு­விக்­கிறது.

இந்த இரண்டு இயக்­கங்­களைச் சார்ந்த நட­வ­டிக்­கை­கள் தீவெங்­கி­லும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

தேசிய தினப் பாடல்

'சுடர்­விட்டு ஒளிர்க' என்ற பொரு­ளைக் கொண்ட தலைப்­பில் இவ்­வாண்­டின் தேசிய தினப் பாட­லும் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

53'ஏ', தி ஐலண்ட் வாய்­சஸ், லியுலோ, ஒலி­வியா ஓங், ஷிகா ஷே, இமான் ஃபாண்டி, லினி­யத் ஆகி­யோர் இந்­தப் பாட­லில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முன்­னோக்­கிச் செல்­வ­தைக் குறிக்­கும் வித­மாக இந்­தப் பாடல் அமைந்­தி­ருப்­ப­தாக பாடலை இயற்­றிய டான் ரிச்­மண்ட், 47, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

"இப்­பா­டல், அதைக் கேட்­பவர்­களை மகிழ்­விக்­க­வும் உற்­சா­கப்­ப­டுத்­த­வும் வேண்­டும் என எண்­ணி­னேன். சிங்­கப்­பூ­ரர்­கள் எல்­லா­ரும் தங்­க­ளால் இயன்­ற­வரை சிறப்­பா­கச் செயல்­பட ஊக்கு­விப்­ப­தால் 'ஷைன் யோர் லைட்' என்ற தலைப்பு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது," என்று அவர் கூறி­னார்.