ஏப்ரல் மாதத்தில் பத்து நாள் இடைவெளியில் வெவ்வேறு வேலையிடச் சம்பவங்களில் ஊழியர்கள் இருவர் மரணமடைந்தனர்.
ஒருவர் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்தூக்கி சுரங்கவாயிற்குழி வேலையில் ஈடுபட்டிருந்தபோது அதில் விழுந்து மாண்டார். மற்றொருவர் ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கி சாதனம் தன்மீது விழுந்ததால் மாண்டார்.
இவ்வாண்டில் இதுவரை 11 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது பற்றி புதன்கிழமை வெளியிடப்பட்ட வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் விழிப்புநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 18ஆம் தேதியன்று, புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்தூக்கி சுரங்கவாயிற்குழி வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆறு மீட்டர் ஆழமான அந்தக் குழியில் ஊழியர் ஒருவர் விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் காயங்கள் காரணமாக பின்னர் அங்கு மாண்டார்.
மின்தூக்கி சுரங்கவாயிற்குழியைச் சுற்றி தடுப்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தாலும் விபத்து நேர்ந்தபோது அந்த ஊழியர் குழியில் விழுவதைத் தடுக்கும் பாதுகாப்புச் சாதனங்களை அணிந்திருக்கவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.
"மின்தூக்கி சுரங்கவாயிற்குழிக்கு அருகிலோ குழியினுள்ளோ வேலை செய்யும் ஊழியர்கள் குழிக்குள் விழும் அபாயத்தை எதிர்நோக்குகிறார்கள்," என்று மன்றத்தின் அறிக்கை கூறுகிறது.
வாகனப் பழுதுபார்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், அவர்களின் ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியது.
தங்களது வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் மேலாண்மை முறையைக் கொண்டு மதிப்பீடு செய்து, அதில் போதுமான அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விழிப்புநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
உதாரணத்துக்கு, உயரத்தில்இருந்து வேலை செய்வதற்குரிய பாதுகாப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டாரை மட்டுமே மின்தூக்கி சுரங்கவாயிற்குழிக்குப் பக்கத்திலோ அல்லது குழிக்குள்ளேயோ வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
குழியைச் சுற்றி போடப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்பில் ஏறியோ அல்லது தடுப்புக்குள் புகுந்தோ செல்லக்கூடாது என்று நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குக் கடுமையான கட்டளை பிறப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 28ஆம் தேதி நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கி சாதனம் தன்மீது விழுந்ததால் தொழில்நுட்பர் ஒருவர் மாண்டார். அவர் அந்தச் சாதனத்தில் பழுதுபார்ப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த விபத்தில் ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
"வாகனப் பழுதுபார்ப்பு வேலைகளில் ஈடுபடுவோர், வாகன உதிரி பாகங்கள் தொடர்பாகவோ, இயந்திர பாகங்கள் தொடர்பாகவோ பணியாற்றும் தருணத்தில் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது," என்றும் மன்றத்தின் அறிக்கை கூறுகிறது.
தங்கள் வேலை தொடர்பான ஆபத்துகள் பற்றியும் அதைத் தவிர்க்க அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் ஊழியர்கள் அறிந்திருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இச்சம்பவங்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றச் சட்டத்தின்படி முதல் முறை குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனத்துக்கு $500,000 வரை அபராதம், தனிநபர்களுக்கு $200,000 வரை அபராதம் அல்லது ஈராண்டு வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
இங்குள்ள நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட பாதுகாப்பு அவகாசம் தரபட்டுள்ளது. 2022 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிய அது பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடையும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால அவகாசத்துக்குள் கடுமையான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார குறைபாடுகள் இழைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக மனிதவள அமைச்சு புதிய வொர்க் பெர்மிட் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.