அரசாங்கக் கொள்கைகளை வகுப்பது தொடர்பில் இளையர் குழுக்கள் அமைக்கப்படும்
அரசாங்கக் கொள்கைகளை வகுக்கையில் இளம் சிங்கப்பூரர்களின் கருத்துகள் அதிகம் கவனத்தில் கொள்ளப்படும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறி இருக்கிறார்.
குறிப்பாக இளையர்கள் தொடர்பான விவகாரங்களில் அது முக்கியத்துவம் பெறும் என்றார் அவர்.
அதன் தொடர்பில் இவ்வாண்டு இரண்டு அல்லது மூன்று குழுக்கள் அமைக்கப்படும். கொள்கைகளை வடிவமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அரசாங்கத்துடன் இணைந்து அவை உருவாக்கும்.
ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 30 இளையர்கள் இடம்பெற்றிருப்பர். தற்கால இளையர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பான ஓர் அம்சம் குறித்து அவர்கள் கருத்துரைப்பர்.
அத்தகைய அம்சங்களையும் இளையர்கள் பரிந்துரைக்கலாம். அதன் தொடர்பில் இளையர் குழுக்கள் ஆற்றும் பணி குறித்து அடுத்த சில மாதங்களில் அமைச்சு அறிவிக்கும்.
தேசிய இளையர் கலந்துரையாடல் அங்கத்தில் அமைச்சர் டோங் இந்த விவரங்களை அறிவித்தார். ஏறக்குறைய 90 இளையர்கள் அதில் கலந்துகொண்டனர். அரசாங்கம் நடத்தும் கலந்துரையாடல்களில் தாங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று அவ்விளையர்கள் வலியுறுத்தினர்.
'முன்னேறும் சிங்கப்பூர்' கருத்தறியும் திட்டத்தின்கீழ் இளையர்கள் கருத்துரைக்கக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.
"இளையர்கள் கொள்கை வகுப்பு தொடர்பான சிக்கல்களையும் அதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சமரசங்களையும் புரிந்துகொள்ள அது கைகொடுக்கும்," என்றார் அமைச்சர்.

