ராபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி நடைபெற்றது.
இரண்டு வகையான நெருக்கடிச் சூழல்களைச் சித்திரித்து மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் 250க்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அவர்கள் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள்.
எம்ஆர்டி நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆகப் பெரிய பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி அது என்று காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் இடம்பெற்ற பயிற்சியை செய்தியாளர்கள் காணமுடிந்தது.
'தாக்குதல்காரர்கள்' மரினா சவுத் பியர் நிலையத்தில் இருந்து ரயில் மூலமாக ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்தை வந்தடைந்தனர். சந்தேகப் பேர்வழி ஒருவரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடுவதுபோலவும் 'பயங்கரவாதி' ஒருவர் மக்களைக் கத்தியால் குத்துவதுபோலவும் காவல்துறை அதிகாரிகள் அவரைச் சுட்டுக் கொல்வதுபோன்றும் பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
உடலில் வெடிகுண்டைப் பொருத்தியிருந்த ஒருவரும் மற்றொருவரும் சேர்ந்து 'பயணிகளை' பிணைபிடித்தனர். பின்னர் அவர்கள் 'சுட்டுக் கொல்லப்பட்டனர்'.
பாவனைப் பயிற்சியின் மற்றொரு கட்டமாக ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையத்தில் நிலத்தடி கடைத்தொகுதி ஒன்றில் கைவிடப்பட்ட கறுப்புப் பெட்டி வெடித்தது. முன்னதாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மோப்ப நாய்களின் துணையோடு அது அடையாளம் காணப்பட்டு அந்த இடத்தில் இருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நெருக்கடிச் சூழலைக் கையாள அரசாங்க அமைப்புகளின் தயார்நிலையைச் சோதிப்பது இத்தகைய பாவனைப் பயிற்சிகளின் நோக்கம்.

