உணவு சேவைத் துறையில் பத்தில் நான்கு வேலைகளை மறுவடிவமைப்பது அவசியம் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கூறி இருக்கிறார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அவ்வாறு செய்வதன் மூலம் சிங்கப்பூரர்களை அத்துறைக்கு ஈர்ப்பது சாத்தியம் ஆகும் என்றார் அவர்.
அத்துறையில் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை தொடர்பில் தீர்வுகாண்பதற்கு வேலைகளில் மிதமானது முதல் விரிவான மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.
பரிமாறுவோர், சமையலறை உதவியாளர், சமையற்கலை வல்லுநர் போன்ற வேலைகள் மறுவடிவமைப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
'சேண்ட்ஸ்' கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் 'ரெஸ்டராண்ட் ஏஷியா 2023' எனும் கருத்தரங்கில் உணவு சேவைத் துறைக்கான வேலை உருமாற்றத் திட்டத்தை வெளியிட்டு துணை அமைச்சர் பேசினார்.
உருமாற்றத் திட்டத்தை 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு, சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, மனிதவள அமைச்சு, தொழில்முறை நிபுணத்துவ சேவை வழங்கும் 'எர்ன்ஸ்ட் அண்ட் யங்' நிறுவனம் ஆகியவை இணைந்து வரைந்துள்ளன.
முதலாளிகளும் ஊழியர்களும் போட்டித்தன்மையையும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்வதற்கு உரிய உத்திகளை அத்திட்டம் பரிந்துரைக்கிறது.
"உணவு சேவைத் துறைச் சூழல் வளர்ச்சி காண்கிறது. இந்நிலையில், நிறுவனங்களும் ஊழியர்களும் வருங்கால வேலைகளுக்கு ஏற்பத் தயார்ப்படுத்திக்கொள்ள உருமாற்றத் திட்டம் உதவும்," என்று துணைஅமைச்சர் லோ கூறினார்.
"கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு, தெரிவுகள் குறித்த வாடிக்கையாளர் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீடித்த நிலைத்தன்மை மிக்க நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு அப்பால், நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் விகிதமும் அதிகரித்துள்ளது," என்று துணையமைச்சர் கூறினார்.
"உள்ளூர் ஊழியரணி மூப்படையும் வேளையில் வேலைவாய்ப்பு தொடர்பிலான இளையர்களின் இலக்குகளும் மாறிஉள்ளன. இதனால் ஊழியர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது.
"எனவே, நிறுவனங்கள் வேலைகளை மறுவடிவமைத்து பகுதிநேர ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும்," என்று திருவாட்டி லோ கூறினார்.
வேலை உருமாற்றத் திட்டம், உணவு சேவைத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க 30 வேலைகளை மதிப்பீடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர் அனுபவம், புத்தாக்கமான தொழில்நுட்பத் திறன்கள் போன்ற திறன்களுக்கான தேவை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளதாக 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

