'பைட் ஸ்டில்ட்' எனப்படும் பறவை இனம் கறுப்பு-வெள்ளை கலந்த உடலும் இளஞ்சிவப்புக் கால்களையும் கொண்டது. அந்த இனத்தைச் சேர்ந்த பறவைகள் முதல்முறையாக ஈசூன், மரினா ஈஸ்ட் டிரைவ் ஆகிய பகுதிகளில் காணப்பட்டுள்ளன.
முன்னதாக 2019ஆம் ஆண்டு முதல் அப்பறவைகள் மூன்று முறை புலாவ் தெக்கோங் தீவில் காணப்பட்டதுண்டு என்று பறவைநல ஆர்வலர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
ஈசூன் அணையை ஒட்டி சைக்கிளோட்டிய டெனிஸ் சோ எனும் ஆடவர் திங்கட்கிழமை பிற்பகலில் 'பைட் ஸ்டில்ட்' பறவைகள் கரையோரம் நிற்பதைப் பார்த்தார்.
மறுநாள் கேமராவுடன் சென்ற அவர் 14 பறவைகளைக் காணமுடிந்ததாகக் கூறினார். செவ்வாய்க்கிழமை மரினா ஈஸ்ட் டிரைவில் ஏழு 'பைட் ஸ்டில்ட்' பறவைகள் பறந்து செல்வதைக் காணமுடிந்ததாக பறவைநல ஆர்வலர்கள் கூறினர்.
சென்ற வாரம் சிங்கப்பூரில் காணப்பட்ட அப்பறவைகள் எங்கிருந்து வந்தவை என்று தெளிவாகத் தெரியவில்லை. நன்னீர்க் குளங்கள் நிரம்பியுள்ள பகுதிகளில் அவை குடியேறும் எண்ணம் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
'பைட் ஸ்டில்ட்' பறவைகள் எளிதில் மருளக்கூடிய தன்மை கொண்டவை. பொதுமக்கள் அவற்றைக் காண நேரிட்டால் அருகில் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

