'உத்ராகன் கார்ப்பொரேஷன்' எனும் கட்டுமான நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த ஹுசேன் நைனா முகமது (படம்) எனும் 47 வயது ஆடவருக்கு நேற்று 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நிறுவனத்தை ஏமாற்றி $5.1 மில்லியன் தொகையைச் செலுத்த வைத்ததன் தொடர்பில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
$2.5 மில்லியன் மோசடி தொடர்பில் சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை ஹுசேன் ஒப்புக்கொண்டார். அதன் மூலம் பெற்ற லாபத்தில் ஒரு பகுதியை சிங்கப்பூருக்கு வெளியே அனுப்பியது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது மேலும் 16 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
2009ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே
ஏமாற்றி தொகையைச் செலுத்தியதில் 'உத்ராகன் கார்ப்பொரேஷன்' நிறுவனத்திற்கு ஏறக்குறைய $500,000 இழப்பு ஏற்பட்டது.
'அல் ரஹ்மான் எண்டர்பிரைசஸ் அண்ட் டிரேடிங்' எனும் நிறுவனத்தின் பங்குதாரரான ஹுசேன் அந்த விவரத்தை 'உத்ராகன் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் மறைத்ததுடன் கடல்துறை காப்பீடு, சரக்குப் போக்குவரத்து ஆகிய சேவைகளுக்கும் பரிந்துரைத்தார்.
மேலும் பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதற்கு உயரதிகாரிகளிடம் அவர் பரிந்துரைத்த நிறுவனம் ஹுசேனின் தந்தைக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
ஏமாற்று வேலைகளின் மூலம் பெற்ற லாபத்தை ஹுசேன் இந்தியாவிற்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் 2017 நவம்பருக்கும் இடையே ஆறுமுறை அவர் அவ்வாறு பணம் அனுப்பினார். கிட்டத்தட்ட $142,000 தொகையைத் தன் பெற்றோருக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் அவர் கூறினார்.

