செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1128aed2-ec18-4dfe-afed-f150171cac93
-

துவாஸ் சாலை விபத்து:

லாரி மோதி ஆடவர் காயம்

படம்: சிங்கப்பூர் ரோடு ஆக்சிடண்ட் ஃபேஸ்புக்

துவாஸ் சவுத் அவென்யூ 3ல் நேற்று முன்தினம் சாலையைக் கடந்த பாதசாரிமேல் லாரி மோதியது. சம்பவத்தில் காயமடைந்த அந்த 33 வயது ஆடவர் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்து குறித்து நேற்று முன்தினம் பிற்பகல் 12.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின. 41 வயதாகும் லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார். மற்றொரு வாகனத்தினுள் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காணொளி சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சாலையின் வலத்தடத்தில் நின்றுகொண்டிருந்த ஆடவரைக் கண்டதும் அந்த வாகனம் நிறுத்தப்பட்டதும் பின்னர் ஆடவர் இடது தடத்தில் இருந்த பச்சை நிறப் பேருந்தை நோக்கி ஓடுவதும் பதிவாகியுள்ளது. இரு தடங்களைக் கடந்த ஆடவர்மேல் மூன்றாம் தடத்தில் லாரி மோதி நிற்பதும் அதில் பதிவாகியுள்ளது.

மின்விளையாட்டு ஊழல் தொடர்பில் ஆடவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

மின்விளையாட்டு ஊழலில் ஈடுபட்ட 21 வயது ரயன் டான் ஷெர்ன் எனும் ஆடவருக்கு குறைந்தது ஆறு மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளும்படி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். தடுப்புக் காவல் நிலையத்தில் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மனநல ஆலோசனைகளும் அவருக்கு வழங்கப்படும். கடந்த ஜனவரி மாதம் லஞ்சம் தர உறுதியளித்ததை டான் ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த மேல்கம் சுங் வாய் கியட் மீதான விசாரணை இன்னும் நிறைவுபெறவில்லை. 2020ஆம் ஆண்டு சுங்கிடம் $1,000 கடன் வாங்கினார் டான். அதைத் திருப்பித் தர இயலாத நிலையில் இணைய விளையாட்டில் ஊழல் செய்யத் திட்டமிட்டனர். அதன்கீழ் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் இணைய விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் செயல்பட்டு $7,109 தொகையை ஈட்டினர். சுங்கிடம் வாங்கிய கடனை டான் திருப்பிச் செலுத்த அது உதவியது.