கூகல், மெட்டா உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை சந்தைகளில் பல திறனாளர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர். அதானல் சிங்கப்பூர் ஊழியரணியில் நிலவிய நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளது.
வேலைச் சந்தையில் 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவில் திறனாளர்கள் புகுந்துள்ளனர் என்று வேலைக்கு ஆள் எடுக்க உதவும் ராண்ட்ஸ்டான்ட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவர் ஜெயா தாஸ் தெரிவித்துள்ளார்.
"தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பலர் வெளியேறுகின்றனர், இதை மற்ற துறை நிறுவனங்கள் ஒரு சிறு வாய்ப்பாகப் பார்க்கின்றன.
"ஏனென்றால் இதற்கு முன்னர் அவர்களால் போதிய அளவு சம்பளம் கொடுத்திருக்க முடியாது அல்லது தகுந்த ஆட்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்,'' என்று அவர் கூறினார்.
பல நாள்களாகச் சிறந்த திறனாளர்கள் வேண்டி காத்திருந்த வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு இந்தச் சூழல் நல்ல வாய்ப்பாக மாறியுள்ளதாகவும் ஜெயா தாஸ் குறிப்பிட்டார்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து ஆட்குறைப்புக்கு ஆளான நபர்களை நிறுவனங்கள் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன என்று எஸ்ஜி டெக் அமைப்பின் தலைவர் வோங் வை மெங் தெரிவித்தார்.
பெரிய நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் புத்தாக்கச் சிந்தனையுடனும் அதிக பணிச்சுமை உள்ள வேலையிடங்களில் சிறப்பாக செயல்படும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
"தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் சிறு தொழில்நுட்ப நிறுவனங்களும் சிறந்த ஊழியர்களை ஈர்த்து வருகின்றன. வங்கி, நிதித்துறை, பொதுத்துறையில் உள்ள நிறுவனங்களும் இதை சாதகமாகப் பார்க்கின்றன.
"எஸ்ஜி டெக் இந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொழில்நுட்பத் துறையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது," என்றும் திரு வோங் தெரிவித்தார்.
மனிதவளத் துறையில் ஊழியர்களைத் தேடிவருகிறது 'விசியர்' என்னும் பகுப்பாய்வு நிறுவனம்.
கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை வேலைக்கு எடுத்தன. அதனால் இப்போது அதிகமாக ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத் தலைவர் டெரன்ஸ் யோங் கூறினார்.
இதுமோசமான சூழல் அல்ல. பெரிய நிறுவனங்களிடம் போட்டிபோட முடியாமல் சிறந்த ஊழியர்களை எடுக்கத் தடுமாறிய சிறு நிறுவனங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றார் அவர்.
ஓசிபிசி வங்கி 2025ஆம் ஆண்டிற்குள் 1,500 தொழிநுட்ப ஊழியர்களை எடுக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தது.
அந்த இலக்கை நோக்கி தற்போது முன்னேறி வருவதாக அந்நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறைக்கு தலைமை வகிக்கும் பிரவீன் ரெய்னா கூறினார்.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டாலும் தரவு வல்லுநர்கள், இயந்திர கற்றல் பொறியாளர்கள், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர்கள் போன்ற அனுபவம் கொண்டவர்களுக்கு தட்டுப்பாடு நீடிப்பதாக அவர் கூறினார்.
யுஓபி வங்கியில் 500க்கும் அதிகமான வேலைகள் நிரப்பப்படாமல் இருப்பதாக அவ்வங்கியின் மனிதவளத்துறையின் தலைவர் டீன் டாங் தெரிவித்தார்.
தற்போது நிரப்பப்படாமல் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள். தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் நிதித்துறைகளில் சேர்ந்தால் அது நிதித்துறைக்கு வலுசேர்க்கும் என்றார் அவர்.
மனிதவள அமைச்சின் தரவு2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கிட்டத்தட்ட 8,200 வேலைகள் சிங்கப்பூரில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு ஆட்குறைப்பிற்குள்ளாகும் உள்ளூர் ஊழியர்களில் பத்தில் ஏழு பேருக்கு ஆறு மாதங்களில் வேறு வேலை கிடைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
அது பெருந்தொற்று காலமான 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.