மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பறவைகள் மகிழ்வனத்தின் நீர் விளையாட்டுத் திடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் அது மூடப்பட்டதாகக் காப்பகத்தின் பேச்சாளர் கூறினார்.
சென்றா வாரம் சனிக்கிழமை 11 வயதுச் சிறுவன் ஒருவன் அங்குள்ள 'எக் ஸ்பிளேஷ்' விளையாட்டுத் திடலின் சறுக்குப் பலகையில் விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் சிறுவனின் மேல்தாடையில் உள்ள முன்பற்கள் இரண்டு உடைந்தன.
ஊழியர்கள் அச்சிறுவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் உதவியதாகக் கூறப்பட்டது.
மறுநாளும் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மண்டாய் வனவிலக்குக் காப்பகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும் பொருட்டு விளையாட்டுத் திடல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இத்தகைய விபத்துகள் மீண்டும் நேராமல் தடுப்பதற்கு உரிய மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பரிசீலிக்கப்படும். அதற்கான மறு ஆய்வில் கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.
மற்றொரு சம்பவத்தில் அந்த விளையாட்டுத் திடலில் காயம் அடைந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கையில் தையல் போட நேரிட்டது என்று அவர் தெரிவித்தார்.
அந்த நீர் விளையாட்டுத் திடலில் நீரில் சறுக்கிச் செல்லும் சறுக்குப் பலகைகள், நீர் தெளிப்பான்கள், குளங்கள் போன்றவை அமைந்துள்ளன. பெரியவர்களின் கண்காணிப்பின்கீழ் சிறுவர்கள் அங்கு விளையாடலாம்.
விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் முன்வைத்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறிய காப்பகத்தின் பேச்சாளர், மற்ற வருகையாளர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளும் மறுஆய்வு செய்யப்படுவதாகக் கூறினார்.
விளையாட்டுத் திடல் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
17 ஹெக்டர் பரப்பளவிலான பறவைகள் மகிழ்வனம் இம்மாதம் 8ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

