செமக்காவ் தீவில் கைவிடப்பட்ட மீன்பிடி வலையில் சிக்கி 14 அரிய வகை சுறா மீன்கள் உயிரிழந்தன. துடுப்புகளின் நுனிப்பகுதி கறுப்பாகக் காணப்படும் 'பிளேக்டிப் ரீஃப்' எனும் வகையைச் சேர்ந்த அவை அருகிவரும் உயிரினமாகக் கருதப்படுபவை.
அத்தைகைய மேலும் ஓர் உயிரினமான 'ஹனிகோம்ப் விப்ரே' எனப்படும் திருக்கை மீன் ஒன்றும் வேறு சில கடல்வாழ் உயிரினங்களும் அவ்வலையில் சிக்கி மாண்டவற்றுள் அடங்கும்.
கைவிடப்பட்ட வலையின் நீளம் 300 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.
வலையில் சிக்கிய சுறா மீன்களில் ஒன்று 1 மீட்டர் நீளமானது என்றும் மற்றவை 50 செ.மீ. நீளம் கொண்டவை என்றும் கூறப்பட்டது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சென்ற ஆண்டு நடத்திய ஆய்வில், 25,500க்கு மேற்பட்ட மீன்பிடிக் கருவிகளும் அவற்றின் சிதைந்த பாகங்களும் இங்கு கைவிடப்பட்டுள்ளன.
2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் கடற்கரைகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றில் கைவிடப்பட்டவை அவை.
அந்த வலைகளில் 1,050க்கு மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் சிக்கின. அவற்றில் 34 விழுக்காட்டு உயிரினங்கள் மாண்டுவிட்டதாக ஆய்வு குறிப்பிட்டது.
தேசியப் பூங்காக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 12 பகுதிகளில் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செமக்காவ் தீவு அவற்றில் ஒன்று அன்று என்பதை ஆய்வு சுட்டியது.

