கள்ள சிகரெட்டுகள் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 436 பெட்டிகளிலும் 745 பொட்டலங்களிலும் இருந்த கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன. அதன் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள். ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர். நால்வரும் 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நால்வரும் ஏமாற்றிய பொருள், சேவை வரி ஏறக்குறைய $54,170 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் பாண்டான் லூப், தோ பாயோ ஈஸ்ட், கேன்பரா ரோடு ஆகிய இடங்களில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நால்வர் மீதும் விசாரணை தொடர்கிறது.
மின்விளையாட்டு ஊழலில் ஈடுபட்ட ஆடவருக்குச் சிறை
மின்விளையாட்டு ஊழலில் ஈடுபட்ட மேல்கம் சுங் வாய் கியட் எனும் 25 வயது ஆடவருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக இருந்த ரயன் டான் ஷெர்ன் எனும் 21 வயது ஆடவருக்கு நேற்று முன்தினம் ஆறு மாத சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது.
'கௌண்டர் ஸ்டிரைக்' எனும் இணைய விளையாட்டு மூலம் இருவரும் நண்பர்களானார்கள். டான் சுங்கிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தரும் நோக்கில் இணைய விளையாட்டில் ஊழல் செய்யத் திட்டமிட்டார். சுங் அதற்கு ஒப்புக்கொள்ளவே 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் இணைய விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் செயல்பட்டு $7,109 தொகையை ஈட்டினர்.
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
முன்னாள் காதலியைக் கடத்தி, கத்திரிக்கோலால் தாக்கிய ஆடவர்
முகமது ஷபிக் முகமது அன்வார் எனும் 22 வயது ஆடவர் தனது முன்னாள் காதலியின் ஆண் நண்பரைக் கத்திரிக்கோலால் குத்தியபின் அப்பெண்ணைக் கடத்திச் சென்றார். காவல்துறையினர் அவரது வாகனத்தைத் துரத்திச் சென்றபோது மூன்று வாகனங்களை மோதிச் சேதப்படுத்தினார். பின்னர் அப்பெண்ணையும் அவர் கத்திரிக்கோலால் தாக்கியதை அதிகாரிகள் கண்டனர்.
சென்ற ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதி இரவு 8.20 மணிக்கும் பின்னிரவு 12.30 மணிக்கும் இடையில் நடந்த அச்சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஷபிக் ஒப்புக்கொண்டார்.
மேலும், ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டியது உள்பட போக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் ஷபிக் மீது சுமத்தப்பட்டன. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் எந்த விதமான வாகனத்தையும் ஓட்டுவதற்கு உரிமம் பெற இயலாது.
நேற்று அந்த ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆறு பிரம்படிகள், $1,000 அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டன.

